ஜெயலலிதா வழக்கு: ஆச்சார்யாவிடம் அறிக்கை கோரியது கர்நாடக அரசு

ஜெயலலிதா வழக்கு: ஆச்சார்யாவிடம் அறிக்கை கோரியது கர்நாடக அரசு
Updated on
1 min read

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவிடம் கர்நாடக அரசு அறிக்கை கோரியுள்ளது.

கர்நாடக சட்டத்துறைக்கு சமர்ப்பிக்கப்படும் அந்த அறிக்கையையொட்டி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து அம்மாநில அரசு முடிவெடுக்கும்.

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கணக்கு மதிப்பீடுகளில் பிழை இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவிடம் கர்நாடக சட்டத்துறை அறிக்கை கோரியுள்ளது. அவர் தனது அறிக்கையை ஓரிரு தினங்களில் சமர்ப்பித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பின் மேல்முறையீடு தொடர்பாக கர்நாடக சட்டத்துறை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பான முடிவை, கர்நாடக அரசு விரைவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 'ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தவறினால், அடுத்த மாதம் நான் நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்வேன்' என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. | விரிவான செய்திக்கு - >ஜெ. வழக்கில் மேல்முறையீடு: சுப்பிரமணியன் சுவாமி உறுதி |

அதேவேளையில், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அவசரம் காட்டவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. | விரிவான செய்திக்கு ->மீண்டும் முதல்வர் பதவி: 'நிதானம்' காட்டுகிறாரா ஜெயலலிதா? |

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் கடந்த 11-ம் தேதியன்று விடுவிக்கப்பட்டனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய அந்தத் தீர்ப்பில் கணக்குப் பிழை இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, இந்த வழக்கில் கர்நாடக அரசு உடனே மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in