ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு- 2: முக்கியப் பங்கு வகித்த 5 நீதிபதிகள்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு- 2: முக்கியப் பங்கு வகித்த 5 நீதிபதிகள்
Updated on
2 min read

19 ஆண்டுகளாக நீண்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போதுதான் ஜெயலலிதாவுக்கு முதல் வெற்றிக்கனி கிடைத்திருக்கிறது.

இவ்வழக்கில் இதுவரை நடந்தவைகளை தொகுத்துப்பார்த்தால் ஏராளமான நபர்களின் பங்களிப்பு இதில் இருக்கிறது. இவ்வழக்கு சென்னை சிங்கார வேலர் மாளிகையில் தொடங்கி சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் என அனைத்து மன்றங்களிலும் விதவிதமான மனுக்களைச் சந்தித்தது.

ஏராளமான நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் மூத்த வழக்கறிஞர்கள், ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், தோட்டா தரணி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் என பல வகையான‌ விஐபி சாட்சியங்களையும் இவ்வழக்கு சந்தித்தது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை 15 சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். இருந்தாலும், அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத் தியதும், 19 ஆண்டுகாலம் நீண்ட நெடிய விசாரணைகளைச் சந்தித்ததுமான இவ்வழக்கின் முக்கிய அத்தியாய‌ங்களை எழுதியவர்கள் 5 நீதிபதிகள்தான்.

நீதிபதி ஏ.எஸ். பச்சாபுரே

ஜெயலலிதாவின் வழக்கை, சென்னை சிங்கார வேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து 2004 செப்டம்பர் 10-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. சொத்துக்குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என ஆச்சார்யா ஆணித்தரமாக வாதிட்டதால் ஒரே வழக்காக இணைத்தார் நீதிபதி பச்சாபுரே. வழக்கின் ஆவணங்களை மொழிப்பெயர்க்க வேண்டும், அவற்றை சரிபார்க்க வேண்டும், திருத்தப்பட்ட மொழிப்பெயர்ப்பு வேண்டும் என ஜெயலலிதா வாய்தா மேல் வாய்தா வாங்கியதால் நீதிமன்றம் முடங்கியது. ஒருகட்டத்தில் பச்சாபுரே, ‘‘நீதிமன்றத்தை நடத்த விடாமல் இருப்பதால் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை போல உணர்கிறேன்'' என மனம் வெதும்பினார்.

பி.எம்.மல்லிகார்ஜூனைய்யா

ஆணி அடித்ததைப் போல ஒரே இடத்தில் நின்ற வழக்கை மெல்ல இறுதிக்கட்டத்துக்கு நகர்த்தியவர் நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா. சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவர‌சியை நீதிமன்ற படிகளை மிதிக்க வைத்தார். நான்கு பேரிடமும் சுமார் 5,500 கேள்விகள் கேட்டு பதில்களை பதிவு செய்தார். ‘சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியது பெரிய சாதனை என்றால், அதனைவிட பெரிய சாதனை பி.எம்.மல்லிகார்ஜூனைய்யா செய்தது’ என்பார் நீதிமன்ற அதிகாரி பிச்சமுத்து.

எம்.எஸ்.பாலகிருஷ்ணா

பவானிசிங் அதிகமாக வாதிடாமல் இருந்த போதும் அவரிடம் பாலகிருஷ்ணா எந்த கேள்வியும் எழுப்பியதில்லை.முதல் முறையாக இவ்வழக்கில் இறுதிவாதத்தை முடித்து தீர்ப்பு எழுத தயாரான‌ நிலையில் 30.9.2013 அன்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வேண்டுகோள் விடுத்தது. இவ்வழக்கில் நீதிபதியாக நீடிக்க தனக்கு விருப்பம் இல்லை என பாலகிருஷ்ணா உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினார்.ஒருவேளை எம்.எஸ்.பாலகிருஷ்ணா தொடர்ந்திருந்தால் ஜெயலலிதா 2013-ம் ஆண்டே விடுதலை ஆகி இருப்பார் என அவரது வழக்கறிஞர்கள் சொல்வார்கள்.

ஜான் மைக்கேல் டி'குன்ஹா

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை நாள்தோறும் நடத்த வேண்டும் என ஜெயலலிதா வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்கு தினமும் வரவழைத்தவர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் எத்தனை கோபமாக நடந்து கொண்டாலும், சிரித்துக்கொண்டே இருப்பார். அரசு வழக்கறிஞர் பவானிசிங் பள்ளி மாணவரைப்போல ஓடி ஒளிந்த போது அபராதம் விதித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். இறுதிவாதத்தை இனிதாக முடித்து, சொத்துக்குவிப்பு வழக்குக்கு முடிவுரை எழுதியவர்.

சி.ஆர்.குமாரசாமி

19 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டை 41 நாட்களில் விசாரித்து முடித்தவர். ஜெயலலிதா தரப்பு, அரசுத் தரப்பு, திமுக தரப்பு, சுப்பிரமணியன் சுவாமி தரப்பு என அனைத்து தரப்பையும் விளாசித் தள்ளினார். அவ்வப்போது கேள்விகளால் துளைத்தெடுப்பார். குற்றவியல் நடைமுறை சட்டவிதிகளை அலசிக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென, திராவிடர் இயக்க வரலாற்றை அசைபோடுவார். பெரியார், அண்ணா, எம்.ஆர்.ராதா, எம்ஜிஆர், கருணாநிதி குறித்த தகவல்களை நினைவுகூர்வார். அதிகமாக பேசாமல் குமாரசாமி எழுதிய 919 பக்க தீர்ப்புதான் தற்போது நாட்டில் உள்ள அரசியல், நீதித்துறை ஆளுமைகளை உரக்கப் பேச வைத்திருக்கிறது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற‌ நீதிபதிகள்

1. சம்பந்தம் (5.5.1997 முதல் 31.3.2000 வரை)

2.ஆறுமுக பெருமாள் ஆதித்தன் (2.4.2000 முதல் 30.4.2002)

3.அன்பழகன் (பொறுப்பு நீதிபதி) (2.5.2002 முதல் 31.7.2002)

4.ராஜமாணிக்கம் (1.8.2002 முதல் 31.1.2004)

5. மதிவாணன் (பொறுப்பு நீதிபதி) (2.2.2004 முதல் 30.4.2004)

6.ஏ.எஸ்.பச்சாபுரே (15.9.2004 முதல் 17.1.2006 வரை)

7.கிருஷ்ணப்பா (பொறுப்பு நீதிபதி) (18.1.2006 முதல் 22.2.2006 வரை)

8.மனோலி (23.3.2006 முதல் 31.5.2009 வரை)

9.ஆன்ட்டின் (பொறுப்பு நீதிபதி) (1.6.2009 முதல் 4.8.2009 வரை)

10.பி.எம். மல்லிகார்ஜூனைய்யா (5.8.2009 முதல் 31.8.2012 வரை)

11. சோமராஜூ (பொறுப்பு நீதிபதி) (1.9.2012 முதல் 15.9.2012 வரை)

12. எம்.எஸ்.பாலகிருஷ்ணா (16.9.2012 முதல் 30.9.2013 வரை)

13.முடி கவுடர் (பொறுப்பு நீதிபதி) (1.10.2013 முதல் 7.11.2013 வரை)

14. ஜான் மைக்கேல் டி'குன்ஹா (31.10.2013 முதல் 30.9.2014 வரை)

15. சி.ஆர்.குமாரசாமி (1.1.2015 முதல் 11.5.2015 வரை)

-இன்னும் வரும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in