சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ. மேல்முறையீட்டு வழக்கை தீர்மானிக்கப் போகும் திமுக வழக்கறிஞர்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ. மேல்முறையீட்டு வழக்கை தீர்மானிக்கப் போகும் திமுக வழக்கறிஞர்கள்
Updated on
2 min read

கடந்த 19 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக க‌ர்நாடக அரசும் சுப்பிரமணியன் சுவாமியும் அவ்வப்போது புதிய அறிவிப்பு க‌ளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மேல் முறையீடு தொடர்பான பணிகளை திமுக செய்து கொண்டிருக்கிறது.

சளைக்காத சண்முக சுந்தரம்

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சண்முக சுந்தரம், ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக வழக்கறிஞர் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். திமுக வழக்கறிஞர் அணித் தலைவரான இவர்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பின் ஆணி வேர். சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வரும் சண்முக சுந்தரம் காட்டும் வழியில் தான் ஜூனியர் வழக் கறிஞர்கள் பயணிக்கிறார்கள்.

1995-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது 'டான்சி' வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சண்முக சுந்தரம் மீது வெல்டிங் குமார் தலைமையிலான ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். 27 இடங்களில் வெட்டுப்பட்ட சண்முக சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார். சேதமடைந்த இடது கை, ஒரு விரலை இழந்தபோதும் தளராமல் சொத்துக்குவிப்பு வழக்கில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

2002-ல் ஜெயலலிதா வழக்கின் விசாரணை சென்னை சிங்கார வேலர் மாளிகையில் நடை பெற்றபோது சாட்சியங்கள் பல்டி அடித்தன. ‘தீர்ப்பு திசைமாறி பயணிக்கப் போகிறது' என்பதை அறிந்த சண்முக சுந்தரம், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சண்முகசுந்தரம் நேரடியாக நீதிமன்றத்துக்கு வரு வதை குறைத்துக் கொண்டார். ஆனால் தனது ஜூனிய‌ர் சரவணனை அனுப்பி வைத்து சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கை கண்காணித்தார்.

ஆச்சார்யா அரசு வழக் கறிஞராக இருக்கும் வரை அமைதி காத்த அவர், பவானிசிங்கின் நடத்தையை பார்த்து மீண்டும் வழக்கில் களமிறங்கினார். நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா இருக்கும்போது வழக்கில் மூன்றாம் தரப்பாக நுழைந்து எழுத்துப்பூர்வ அறிக்கையையும் தாக்கல் செய்தார். நீதிபதி குன்ஹாவின் தண்டனை தீர்ப்பால் ஓய்ந்துவிடாமல், மேல் முறையீட்டிலும் ஜெயலலிதா தரப்புக்கு நெருக்கடி கொடுத்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றம் பவானிசிங்கை நீக்கக் கோரும் மனுவையும் மூன்றாம் தரப்பாக சேர்க்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்றார். தற்போது நீதிபதி குமாரசாமி வழங்கி இருக்கும் தீர்ப்பை ஆராய்ந்து, மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கான மனுக்களை தயாரித்து வருகிறார். மேல்முறையீட்டு விவகாரத்தில் கர்நாடக அரசும் சுப்பிரமணியன் சுவாமியும் சுணங்கினாலும் திமுக கட்டாயம் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

‘எக்ஸ்பிரஸ்' குமரேசன்

திமுக ஆட்சியில் அரசு வழக் கறிஞராக செயல்பட்ட குமரேசன் 2013-ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வருகிறார். திமுக மூத்த வழக்கறிஞர் நடராஜனின் ஜூனியரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் வாதாடிய அனுபவம் மிக்கவர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பவானிசிங் தவித்தபோது அவருக்கு பதிலாக குமரேசன்தான் பதில் அளிப்பார்.

‘அன்பழகனை சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பாக சேர்க்கக் கோரிய குமரேசன், குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளை நீதிமன்றத்தில் வரிசையாக அடுக் கினார். ‘எக்ஸ்பிரஸ்' வேகத்தில் அவர் வாதிட்டதால் பெங்களூரு பத்திரிகையாளர்கள் 'எக்ஸ்பிரஸ்' குமரேசன் என அழைக்க தொடங்கினர்.

குமரேசனின் வாதத்தை அடிப் படையாக வைத்தே நீதிபதி குன்ஹா அன்பழகனுக்கு எழுத்துப்பூர்வ வாதம் அளிக்கும் வாய்ப்பை அளித்தார். குன்ஹாவின் அனுமதியை அடிப்படையாக வைத்தே மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று திமுக எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. இதற்கு குமரேசனின் எக்ஸ்பிரஸ் பாணியிலான வாதம்தான் முக்கிய காரணம்.

‘ஆல் இன் ஆல்' ராமசாமி

கர்நாடக மாநில திமுக அமைப் பாளரான ராமசாமி, 2013-ல் திமுக சொத்துக்குவிப்பு வழக்கில் நுழைந்ததில் இருந்து தினமும் நீதிமன்றத்துக்கு வருவார். திமுக வழக்கறிஞர்கள், திமுக ஆதரவு ஊடகங்களின் செய்தியாளர்கள் வராவிட்டாலும் தினமும் தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்து செய்தியை தவறாமல் தலைமைக்கு தெரிவிப்பார்.

பெங்களூரு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ள ராமசாமி அங்குள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் வாதாடியுள்ளார். நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறையோ, உள்ளூர் விடுமுறையோ விட்டாலும் கூட தினமும் நீதிமன்ற வளாகத் துக்கு வந்து ஜெயலலிதா வழக்கறி ஞர்களின் நடவடிக்கையை நோட்டம் விடுவார்.

‘பெங்களூருவில் ராமசாமி போன்ற உண்மையான கட்சிக் காரர் இருப்பதால் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் திமுகவால் ஜெயலலிதாவுக்கு இத்துணை சவாலாக இருந்திருக்க முடிந்தது'' என கன்னட ஊடகங்கள்கூட எழுதியுள்ளன.

(இன்னும் வருவார்கள்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in