ரெடிமேட் கழிவறையை சீதனமாகப் பெற்ற மணமகள்: மகாராஷ்டிராவில் ஒரு முன்னுதாரண நிகழ்வு

ரெடிமேட் கழிவறையை சீதனமாகப் பெற்ற மணமகள்: மகாராஷ்டிராவில் ஒரு முன்னுதாரண நிகழ்வு
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியில் மணமகள் ஒருவர் தன் பிறந்த வீட்டு சீதனமாக ரெடிமேட் கழிவறையைப் பெற்றுள்ளார். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அகோலாவில் வசித்து வருபவர் சைதாலி டி.கலாக்கே. இவருக்கும் யவத்மால் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர மகோதே என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அப்போது, மணமகன் வீட்டில் கழிவறை இல்லை என்பது சைதாலிக்கு தெரிய வந்தது. தனது பிறந்த வீட்டில் கழிவறையைப் பயன்படுத்துவதை பழக்கமாக்கிக் கொண்ட அவர், தான் திருமணமாகிச் செல்லும் புகுந்த வீட்டில் அனைவரும் திறந்தவெளியைக் கழிவறையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கவலையடைந்தார்.

எனவே இதுகுறித்து தனது பெற்றோரிடம் விவாதித்தார் சைதாலி. அவர்களிடம் தனக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாக நகைகள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் போன்றவற்றைக் கொடுப்பதைவிட ரெடிமேட் கழிவறை ஒன்றைத் தர கோரிக்கை வைத்தார். ஆரம்பத்தில் தங்களின் மகள் சொல்வதைக் கேட்காத பெற்றோர், பின்னர் நிலைமையைப் புரிந்துகொண்டு அவருக்கு ரெடிமேட் கழிவறையை சீதனமாக அளித்துள்ளனர்.

எங்கே இத்தகைய சீதனத்தைக் கண்டு மக்கள் சிரிப்பார்களோ என்று சைதாலியின் பெற்றோர் கவலையடைந்தனர். ஆனால், திருமணத்துக்கு வந்திருந்த பலரும் அந்த ரெடிமேட் கழிவறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டதோடு, மண மக்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அந்த திருமணத்துக்கு வந்திருந்த பல இளம் பெண்கள், தங்களின் திருமணத்தின்போதும் இத்தகைய சீதனத்தை மட்டுமே கேட்போம் என்று உறுதிகூறினர்.

மக்கள் எல்லோரும் பாராட்ட, மணமக்களோ தங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்க உள்ள ‘வாழ்க்கைத் துணை'யை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in