

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளி யாகிறது.
இதையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும் அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்தார். கடந்த மார்ச் 11-ம் தேதி அனைத்துக்கட்ட விசாரணையும் நிறைவடைந்ததையொட்டி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘மேல்முறையீட்டு வழக்கில் மே 11-ம் தேதி காலை 11 மணிக்கு நீதிமன்ற ஹால் எண் 14-ல் தீர்ப்பு வெளியிடப்படும்' என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா நேற்று முன்தினம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்க ளூருவில் நேற்று உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. ஓம் பிரகாஸ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பெங்களூரு மாநகர இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறியதாவது: ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியாவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி 1 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி கூடுதல் ஆணையர் அலோக் குமார் தலைமையில் 4 உதவி ஆணை யர்கள் , 20 காவல் ஆய்வாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின் றனர். நீதிமன்றத்தின் 5 நுழை வாயில்களிலும் சோதனைக்குப் பிறகே வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
பெங்களூருவில் அதிமுகவினர்
ஜெயலலிதா வழக்கில் கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது அதிமுகவினர் தமிழக எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பெங்களூருவுக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனால், இந்த முறை ஜெயலலிதா உட்பட 4 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்றபோதும், ஆயிரக்கணக்கான அதிமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் பெங்களூருவில் குவிந்துள்ளனர். சிவாஜிநகர், மெஜஸ்டிக், மார்க்கெட், சாந்திநகர், எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு ஆகிய இடங்களில் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து கார், வேன், பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இன்று பெங்களூரு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
எல்லையில் பாதுகாப்பு
தமிழக- கர்நாடக எல்லைப் பகுதி யிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. ஓசூர் உட்கோட்ட போலீஸார் சுமார் 300-க்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.