ஆதிக்க சாதியினர் தொடர் அச்சுறுத்தல்: கர்நாடக கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்ட சலூன்களில் மறுப்பு

ஆதிக்க சாதியினர் தொடர் அச்சுறுத்தல்: கர்நாடக கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்ட சலூன்களில் மறுப்பு
Updated on
2 min read

முடிவெட்ட அண்டை மாநிலம் செல்லும் கொடுமை

*

கர்நாடக மாநிலம் மதுகிரி அருகேயுள்ள கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலின் காரணமாக தலித் மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதும் தீண்டாமை கொடுமை நிலவுவதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஹூப்பள்ளி, பெல்லாரி, யாதகிரி, விஜயப்புரா, மதுகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிகை திருத்துவோர் (சலூன் கடைக்காரர்கள்) தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுக்கிறார்கள். இதற்கு அங்கு வாழும் ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலும், மிரட்டலுமே காரணம் என சமூக மாற்றத்துக்கான முற்போக்காளர்கள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

இந்நிலையில், ''ம‌துகிரி மாவட்டம் சிரா வட்ட‌த்தில் உள்ள அஞ்சினஹள்ளி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 3 சிகை திருத்தும் கடைகள் இருந்தும், தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுக்கின்றனர். எனவே, இந்த கிராமத்தில் உள்ள தலித் மக்கள் முடிவெட்டுவதற்கும், சவரம் செய்வதற்கும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்த்ப்பூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் மாதந்தோறும் ரூ.150 முதல் 250 வரை செலவாகிறது. தினக்கூலி தொழிலாளர்களால் ஒவ்வொரு முறை முடிவெட்டுவதற்கும் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய முடியவில்லை. சுமார் 30 கிமீ தூரம் பேருந்தில் பயணிக்க வேண்டியிருப்பதால் முதியவர்களும் சிறுவர்களும் முடிவெட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.

தலித் மக்களுக்கு முடிவெட்டாமல் தீண்டாமை கொடுமை இழைக்கும் சிகை திருத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அஞ்சினஹள்ளி கிராமத்தில் தலித் மக்களுக்கு முடிவெட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என அதே கிராமத்தை சேர்ந்த ஹனுமந்த்ராயப்பா கடந்த 3-ம் தேதி மனு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானதால் அஞ்சினஹள்ளி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தல்

இதையடுத்து அங்குள்ள 3 சிகை அலங்கார கடைகளும் (சலூன் கடைகள்) மூடப்பட்டன. கடந்த 4-ம் தேதி இரவு புகார் அளித்த ஹனுமந்த்ராயப்பாவின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக தகவல் அறிந்த மதுகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.லக்ஷ்மண் தலைமையிலான போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர்.

அப்போது அஞ்சினப்பள்ளி கிராமத்தை சுற்றியுள்ள சில குக்கிராமங்களில் வசிக்கும் ஆதிக்க சாதியினரும், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களும் சலூன் கடைக்காரர்கள் தலித் மக்களுக்கு முடிவெட்டக் கூடாது. தங்களுக்கு பயன்படுத்தும் நாற்காலி, கத்தரிக்கோல் உள்ளிட்ட பொருட்களை தலித் மக்களுக்கு பயன்படுத்தக்கூடாது. மீறி வெட்டினால், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படும். இந்த வழக்கம் காலங்காலமாக அஞ்சினப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் நடைமுறையில் உள்ளது என எச்சரித்துள்ள‌னர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலித் சிறுவனுக்கு முடிவெட்டியதால் ஒரு சிகை அலங்கார கடை தாக்குதலுக்கு உள்ளான‌து. இதனால் சிகை திருத்துவோர் இனி தலித் மக்களுக்கு முடிவெட்ட முடியாது என மறுப்பு தெரிவித்தது என்பது தெரியவந்தது. எனவே போலீஸார் ஆதிக்க சாதியினரிடமும், சிகை திருத்துவோரிடமும் சமத்துவ பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சலூன் கடைக்காரர்கள், ''அனைத்து தரப்பு மக்களுக்கும் முடிவெட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு சிலர் எங்களை மிரட்டுவதால் முடிவெட்ட முடியாமல் போகிறது. இதில் எங்களுடைய தரப்பில் எந்த தவறும் இல்லை. தலித் மக்களுக்கு முடிவெட்டினால் எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்'' என தெரிவித்தனர்.

தொடரும் கொடுமை

இதையடுத்து கடந்த 5-ம் தேதி போலீஸார் பாதுகாப்புடன் சலூன் கடைகள் திறக்கப்பட்டு தலித் மக்களுக்கு முடிவெட்டப்பட்டது. அஞ்சினப்பள்ளி கிராமத்தில் முடிவெட்ட அனுமதி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தலித் மக்கள் போலீஸாருக்கும், சிகை திருத்துவோருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், அன்றிரவு மூடியிருந்த சாலூன் கடைகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் பரவியது. இதையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ள‌னர்.

இது தொடர்பாக புகார்தாரர் ஹனுமந்த்ராயப்பாவிடம் கேட்டபோது, ''எங்களுடைய தாத்தா காலத்தில் இருந்த இந்தக் கொடுமை நடந்து வருகிறது. எங்கள் குழந்தைகள் தலைமுறையிலும் இந்த கொடுமை நீடிக்க விட மாட்டோம். ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு சிலர் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இருப்பினும் ஒரு சில குழுக்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதனால் உயிருக்கு பயந்துள்ள சலூன் கடைக்காரர்கள் கடந்த 7-ம் தேதியில் இருந்து கடைகளை மூடிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனால் மீண்டும் தலித் மக்கள் முடிவெட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு உடனடியாக தலையிட்டு, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in