

ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு சுதந்திர மான ஒழுங்குமுறை ஆணையம் அவசியம் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
பிடிஐ செய்தியாளருக்கு சுரேஷ் பிரபு பேட்டி அளிக்கும்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதனால் தனியார் பங்களிப்புக்காக பொதுநலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது. பொதுநலனுக்கான செயல்பாடு களும் தடைபடாது.
இதுபோல் தனியாரும் தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு குறித்து கவலை அடையத் தேவையில்லை. பொது மக்கள், தனியார் இரு தரப்பினரையும் சம நிலையில் பாவித்து ரயில்வே வர்த்தக செயல் பாடுகள் இருக்கும்.
மின்சாரம், தொலைத்தொடர்பு, செபி போன்ற பிற ஒழுங்குமுறை ஆணையங்களை போல இதனை அமைக்கலாம். இது தொடர்பாக மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியாவின் ஆலோசனையை கேட்டுள்ளோம். சமீபத்தில் அவர் என்னை சந்தித்தபோது, இதுதொடர்பாக நாங்கள் விவாதித் தோம். வடிவமைப்பை அவர் தயாரித்த பிறகு அது தொடர்பாக நாங்கள் விரிவான ஆலோசனை செய்வோம். இணைய தளம் வாயிலாகவும் பொதுமக்களின் கருத்துகளை கேட்போம்.
ரயில்வே துறையின் ஆற்றல் மேம்பாடு, பயணிகளுக்கான வசதிகள், அதிவேக ரயில்சேவை போன்ற திட்டங்களில் தனியார் பங்களிப்பு கோரப்படும்.
ரயில்வே துறையில் சமீபத்தில் சிலர் சரக்குகளின் எடையை குறைத்து காண்பித்து செய்த மோசடி தொடர்பாக சிபிஐ நடத்திய சோதனை குறித்து கேட்கிறீர்கள். இது ஊழலை ஒழிப்பதற்கான கூட்டு நடவடிக்கை ஆகும்.
இந்த முறைகேடு தொடர்பான அடிப்படை காரணத்தை கண்டறிந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு எங்கள் ஊழல் தடுப்பு பிரிவையும் கேட்டுக்கொண்டுள்ளோம்.
“ரயில்வே துறையில் உங்களுக்கு வேலை கிடைத்து விட்டது. குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் உடனடியாக பணம் டெபாசிட் செய்யுங்கள்” என்று சிலர் கடிதம் அனுப்பியது தொடர் பாக பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. இவை எல்லாமே ரயில்வே துறையில் ஊழலை ஒழிக்கவும் வெளிப்படைத் தன்மை கொண்டு வருவதற்குமான நடவடிக்கைகள் ஆகும்.
குறைந்த தூர ரயில்களில் நாங்கள் பயணிகளை இழந்து வருவது உண்மைதான். ரயில் நிலையங்களை அடைவதில் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இப்பிரச்சினைக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி அளிப்பது குறித்து ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பான பரிந்துரைகள் எனது பட்ஜெட் அறிக்கையிலும் உள்ளன.
ஒரே டிக்கெட் மூலம் பஸ், ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்யும் வசதி செய்யவேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம். சிறிது காலத்துக்குப் பிறகு இது சாத்தியமாகும்.
மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்கள் மற்றும் பல்வேறு மாநில அரசு களிடம் இதுதொடர்பாக நாங்கள் பேசினோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் நான் பேசினேன். இதையொட்டி நான் கொல்கத்தா செல்லவிருக்கிறேன். அனைவருடனும் ஆலோசித்து ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்கான ஏற்பாடுகளை செய்வோம்.
ரயில்வே துறையில் அளவுக்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனரா என கேட்கிறீர்கள். ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையை 17.5 லட்சத்தில் இருந்து 13.5 லட்சமாக குறைத்துள்ளோம். ரயில்வே துறையின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதில் எப்படி அளவுக்கு அதிகமாக தொழி லாளர்கள் இருக்க முடியும்?
நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் அடுத்த 3 4 ஆண்டுகளில் வைஃபை வசதி அளிக்க திட்டமிட்டு வருகிறோம். இதற்காக கண்ணாடி இழை கேபிள் பதிப்பது போன்ற பணிகளில் பிற அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் டெண்டர் மூலமாக ‘ரயில்டெல்’ மேற்கொள்ளும்.
இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.