

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் பாஜக-வையோ, மோடியையோ விமர்சிப்பது நம் வேலையல்ல என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அனைத்திந்திய பிரச்சார் பிரமுக்-ஐ சேர்ந்த தலைவர் மன்மோகன் வைத்யா கூறும் போது, “அரசின் செயல்திறனை மதிப்பிடுவது நமது வேலையல்ல” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகம் நாக்பூரில் உள்ளது. அதன் வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளன. மேலும் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கும் ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் சுதேசி ஜாக்ரன் சங்கம் ஆகியவை அரசின் ஒரு சில செயல்பாடுகள் கவலையளிப்பதாக தெரிவித்தாலும், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் சிலவற்றை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவற்றுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் என்ன விவகாரங்கள் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.
பிரதமர் மோடியின் அயல்நாட்டுப் பயணங்களினால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்து உதவிகரமாக அமைவதாகவே அந்த அமைப்பு பார்ப்பதாக நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். சுமார் 40 நாடுகளில் ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்புகள் காலூன்றியதாகவும் தகவல்கள் கூறியுள்ளன.