Last Updated : 15 May, 2015 08:00 AM

 

Published : 15 May 2015 08:00 AM
Last Updated : 15 May 2015 08:00 AM

வங்கி ஊழியரின் மனு தள்ளுபடி: காந்தியைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மகாராஷ்டிராவில், பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உள் சுற்றுக்கான இதழ் வெளியிடப்படுகிறது. மராத்தி கவிஞர் வசந்த் தத்தாத்ரேயா குர்ஜார் கடந்த 1984-ம் ஆண்டு எழுதிய கவிதையை வங்கி இதழில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியிட்டிருந்தனர். அப்போது தேவிதாஸ் ராமச்சந்திர துல்ஜாபுர்கர் இதழின் ஆசிரியராக இருந்தார். இவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

ஆனால், வங்கி இதழில் காந்தியைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் கவிதை எழுதப் பட்டிருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து ‘படிட் பவன் சங்காதன்’ என்ற அமைப்பு புனே போலீஸில் புகார் அளித்தது. மகாத்மா காந்தியைப் பற்றி ஆபாச மாகவும், தரக்குறைவாகவும் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. இது தேசத் தந்தையின் பெருமையை சீர்குலைக் கும் வகையில் உள்ளதால், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியிருந்தது.

இதையடுத்து கவிஞர், சங்கத்தில் இருந்த வங்கி ஊழியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட், வழக்கில் கூறப்பட்டிருந்த சில குற்றச் சாட்டுகளை தள்ளுபடி செய்தார். ஆனால், ஆபாச புத்தகங்கள் விற் பனை தடை சட்டத்தின் கீழ் கூறப்பட்ட புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தனர். இந்த வழக்கை கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘வங்கி இதழில் வெளியான கவிதையில் உள்ள சொற்கள் ஆபாசமாக இருப்பது மட்டு மன்றி அநாகரிகமாகவும் உள்ளது. இது கண்டிப்பாக தேச தந்தையின் மரியாதையை குலைக்கும்’’ என்று கூறியது. ஆனால், இதழை அச்சிட்ட வர், வெளியிட்டவர் ஆகியோர் நிபந் தனையற்ற மன்னிப்பு கேட்டதால், அவர்கள் மீதான கிரிமினல் புகார் களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனினும் இதழ் ஆசிரியராக இருந்த தேவிதாஸ் மீதான புகாரை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தன் மீதான புகார்களை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பான்ட் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை அதன் எல்லையை மீறக் கூடாது. காந்தியைப் பற்றிய அந்தக் கவிதை மிகவும் தரக்குறைவாக உள்ளது. காந்தி போன்ற வரலாற்றில் மதிக்கத்தக்கவர்களை இழிவுபடுத் தும் வகையில் தரக்குறைவான வார்த் தைகளால் எழுதுவதை அனுமதிக்க முடியாது. கவிதை, நாவல் அல்லது இலக்கிய படைப்பு என்ற பெயரில், வரலாற்றில் மிகச் சிறந்தவர்களாக உள்ளவர்களை தரக்குறைவாக எழுத யாருக்கும் உரிமை இல்லை.

ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர் யாராக இருந்தாலும் புனைக்கதை களில் வரலாற்றில் மதிக்கத்தக்கவர் களைப் பற்றி ஆபாசமாக எழுதினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, குற்றம் சாட்டப்பட்ட தேவிதாஸ் மீதான புகார்களை ரத்து செய்ய மறுத்து பாம்பே உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு செல்லும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x