

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்ஐஎல்) மும்பை மோட்டார் வாகனத் துறையில் ரூ.1.6 கோடி கட்டணம் செலுத்தி 7 சீரீஸ் பி.எம்.டபுள்யூ கார் ஒன்றை பதிவு செய்துள்ளது.
அரசு விதிகளின்படி காரின் விலையில் 20 சதவீதம் பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
காரின் மதிப்பு உயர்வுக்கு அதன் ஒரிஜினல் விலை காரணம் அல்ல. அதன் உட்புற மற்றும் வெளிப்புற பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களே காரணம்.
முகேஷ் அம்பானியின் பாது காப்பு காரணங்களுக்காக இந்தக் கார் முழுவதும் குண்டு துளைக்காத தகடுகளை கொண்டுள்ளது. மேலும் அடிப்பகுதி மற்றும் ஜன்னல்கள் மிகவும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமான பி.எம்.டபுள்யூ 760i ரகத்தைச் சேர்ந்த இந்த காரின் விலை 1.9 கோடி மட்டுமே. ஆனால் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள முகேஷ் அம்பானிக்கு, பாதுகாப்பு தேவையை கருதி, பி.எம்.டபுள்யூ.வின் ஜெர்மனி பிரிவு சார்பில் இந்த கார் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் குண்டு துளைக்காத கார்களுக்கு 300 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் இக்காரின் விலை 8.5 கோடியாக உயர்ந்தது. இதனால் பதிவுக் கட்டணமாக 1.6 கோடி செலுத்தப்பட்டுள்ளது.