

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சந்தேகத்துக்கிடமான 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸாருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
சசி தரூரின் வீட்டுப் பணியாளர் நரைன் சிங், ஓட்டுநர் பஜ்ரங்கி மற்றும் நண்பர் சஞ்சய் தேவன் ஆகியோர் இச்சோதனை நடத்த தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இதுகுறித்து மெட்ரோபாலிட் டன் மாஜிஸ்திரேட் சுனில்குமார் ஷர்மா தனது உத்தரவில், “சந்தேகத்துக்கிடமான 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை (பாலிகிராப் டெஸ்ட்) நடத்த அனு மதி கோரும் மனு ஏற்கப்படுகிறது. விதிகளுக்கு உட்பட்டு இச்சோதனை நடத்தவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இம்மனு தொடர்பான விசார ணையில் போலீஸார் நீதிமன்றத் தில் கூறும்போது, “சுனந்தாவின் உடலில் இருந்த காயங்கள் தொடர் பான சில முக்கிய உண்மைகளை இவர்கள் மறைக்கின்றனர்” என்றனர்.
மூவரின் தரப்பில் அவர்களின் வழக்கறிஞர் கூறும்போது, “வழக்கு விசாரணையில் 3 பேரும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு தரு கின்றனர்.
உண்மை கண்டறியும் சோதனை நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் போலீஸார் விரும்பினால் இதற்கு உடன்பட மூவரும் தயார்” என்றார்.