Last Updated : 15 May, 2015 08:07 AM

 

Published : 15 May 2015 08:07 AM
Last Updated : 15 May 2015 08:07 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவுக்கு வெற்றி பெற்று தந்த வழக்கறிஞர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் சட்டத்தின் துணையோடு ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசியை விடுவித்தவர்கள் அவர்களது வழக்கறிஞர்கள்.

2014 செப்டம்பர் 27-ம் தேதி நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதற்காக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கதறி அழுததைக் கண்டு கர்நாடக வழக்கறிஞர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். த‌ற்போது ஜெய லலிதாவுக்கு விடுதலை கிடைத்த தும் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததை அம்மாநில உயர் நீதி மன்றம் இதுவரை கண்டதில்லை.

மணிசங்கர்

சென்னை உயர் நீதிமன்றத்தி லும், உச்ச நீதிமன்றத்திலும் பல் வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வாகை சூடியவர் மணி சங்கர். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நவநீதகிருஷ்ணன் விலகி யதைய‌டுத்து 2011-ல் இருந்து மணிசங்கர், சசிகலாவுக்காக வாதாட தொடங்கினார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.பாலகிருஷ்ணா, ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆகியோர் முன்னிலையிலும், உயர் நீதி மன்றத்தில் குமாரசாமி முன்னிலை யிலும் வாதாடினார்.

பி.குமார் பவ்யமான குரலில் வாதாடுவதில் வல்லவர் என்றால் மணிசங்கர் ஆணித்தரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் வாதாடுவதில் வல்லவர்.

மேல்முறையீட்டில் சசிகலாவுக் காக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.பசன்ட் ஆஜரான போதும், அவரது வாதத்துக்கான தயாரிப்புகளை வழங்கியவர் மணிசங்கர். ஒரு கட்டத்தில் பசன்ட், உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட போதும், குமாரசாமியின் கேள்விகளால் சளைத்த போதும் இவரே அவ ருக்கு கைக்கொடுத்தார். `ஜெய லலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தனித்தனியான வருமானம் இருந்தது. தனித்தனியான சொத்து கள் இருந்தது. ஒரே வீட்டில் வசித்தாலும்,ரத்த சம்பந்தம் இல் லாததால் பினாமி அல்ல. இருவரும் கூட்டுசதி செய்யவில்லை' என இவர் முன்வைத்த வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதிரொலித்துள்ளது.

அசோகன்

சசிகலாவின் உறவினரான அசோகன், இளவரசியின் வழக் கறிஞராக வக்காலத்தில் கையெழுத்து போட்டவர். சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதில் இருந்து நீதிமன்றத்துக்கு வந்து சென்றார். 2007-ம் ஆண்டு ஜோதி இவ்வழக்கில் இருந்து விலகியதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் பெங்களூருவுக்கு வந்தார். அப்போது நவநீதகிருஷ்ணன னுக்கு வலது கரமாக இருந்து தினமும் நீதிமன்ற நடவடிக்கை களை கவனித்து கார்டனுக்கு தகவல் சொல்பவராக மாறினார்.

நவநீதகிருஷ்ணன் வழக்கில் இருந்த விடுபட்ட பிறகு இவரும், செந்திலும் சொத்து குவிப்பு வழக்கின் முழு பொறுப்பாளர் களாக உயர்ந்தார்கள். நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜூனைய்யாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சசிகலாவும், இளவரசியும் தடுமாறிய போது அவர்களுக்கு மணிக்கணக்கில் பதில்களை தயாரித்துக் கொடுத் தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே விரிசல் விழுந்த போது அசோகன் கவலை அடைந்தார். மீண்டும் ஜெயலலிதா - சசிகலா நட்பு ஏற்பட்டதற்கு இவரும் ஒரு காரணம் என கார்டனுக்கு நெருக்கமானவர்கள் கைக்காட்டுகிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் அசோகனை ஜூனியர் வழக்கறிஞர்கள் `ஹெட் மாஸ்டர்' என அழைப்பார்கள். ஏனென்றால் அனைவரையும் செல்லமாக அதட்டி, வேலை வாங்குவார். மேல்முறையீட்டுக் கான ஆவணங்களை தயாரிக்கும் பணி ஜெயலலிதா வீட்டுக்கு எதிர் வீட்டில் இரவு பகலாக நடந்துக்கொண்டிருந்த போது அசோகன் விடிய விடிய வேலை செய்தார்.

இவரது கண்டிப்பான அணுகுமுறை இல்லாமல் போய் இருந்தால் அத்தனை லட்சம் ஆவணங்களையும் தேர்வு செய்து, ஜெராக்ஸ் எடுத்து குறுகிய காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க முடியாது. எந்த நீதிமன்றத்திலும் அசோகன் வாதாடியதில்லை என்றாலும், அவரது வழிக்காட்டல் இல்லையென்றால் வெற்றி சாத்தியமாகி இருக்காது என்கிறார் கள் ஜூனியர் வ‌ழக்கறிஞர்கள்.

செந்தில்

சொத்துக்குவிப்பு வழக்கில் நவநீதகிருஷ்ணன் மனு மேல் மனு போட்டு, வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த நேரம், `இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது' என எல்லோரும் சொன் னார்கள். அப்போது அவரது உதவி யாளராக நாமக்கல்லை சேர்ந்த செந்தில் முதன் முதலாக பெங்க ளூரு வரத் தொடங்கினார். 2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதும் நவநீதகிருஷ்ணனுக்கு பதவிகள் படையெடுத்தன.

அந்த நேரத்தில் நவநீத கிருஷ்ணன், செந்திலை சசிகலாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாளடைவில் ஜெயலலிதாவின் சட்ட ஆலோ சகராகவும் செந்தில் மாறினார். குமாரும், மணிசங்கரும் ஜெய லலிதாவுக்காக வருடக் கணக்கில் வாதாடினாலும் அவர்களை விட செல்வாக்கான மனிதராக செந்தில் வலம் வந்தார்.

உரிய நேரத்தில் மனு போடுவது, தள்ளுபடியான மனுக்களை மேல்முறையீடு செய்வது, உரிய‌ வழக்கறிஞர்களை தேர்வு செய்வது, டெல்லியில் காய்களை நகர்த்தி யது எல்லாமே செந்தில் தான். இது மட்டுமில்லாமல் மேல்முறை யீட்டில் எவ்வித சிக்கலும் இல்லாமல் வழக்கை வெற்றிக்கர மாக முடிக்க அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என திட்டம் போட்டார்.

மே 11-ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை பெங்களூரு ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்துவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தார். 11.2 மணிக்கு விடுதலை செய்யப்பட்டதாக குமாரசாமி சொன்ன போது அடுத்த கணமே செந்திலை அவரது ஆதரவாளர்கள் தோள் மீது சுமந்து கொண்டாடினார்கள்.

வாதாடிய வழக்கறிஞ‌ர்கள்

* விருதாச்சல ரெட்டியார் (அதிமுக வழக்கறிஞர் இல்லை) மற்றும் குழுவினர் (1997 முதல் 1998 வரை)

* கே.சுப்பிரமணியம் (அதிமுக வழக்கறிஞர் இல்லை) மற்றும் குழுவினர் (1998-1999 வரை)

* தீன‌சேனன் (அதிமுக வழக்கறிஞர் இல்லை) மற்றும் குழுவினர் (1999 சில மாதங்கள் மட்டும்)

* ஜோதி (முதலில் அதிமுக வழக்கறிஞர் இல்லை. பிறகு கட்சியில் இணைந்து ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார் ) மற்றும் குழுவினர். (2000 முதல் 2007 வரை )

* நவநீத கிருஷ்ணன் (அதிமுக வழக்கறிஞர்) தலைமையில் அசோகன் மற்றும் குழுவினர் (2007 முதல் 2010 வரை )

* பி.குமார் தலைமையில் மணிசங்கர், அசோகன், செந்தில், பன்னீர் செல்வம், அன்புக்கரசு, மூர்த்திராவ், செல்வகுமார், திவாகர், பரணிகுமார், எம்.ஜோதி குமார், அம்பிகை தாஸ், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர்.(2010 முதல் தற்போது வரை)

* மேல்முறையீட்டு வழக்கறிஞர்க‌ள் ஃபாலி எஸ்.நாரிமன், எல்.நாகேஸ்வர ராவ், ஆர்.பசன்ட் (2014 முதல் 2015)

(இன்னும் வருவார்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x