ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் கருத்து

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் கருத்து
Updated on
2 min read

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் கடந்த 11-ம் தேதி விடுதலை செய்தது. நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் கூட்டுத்தொகை பிழைகள் உட்பட பல குளறுபடிகள் இருப்பதால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் மேல்முறையீடு செய்வ தற்கு ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா? மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையா ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரிடம் கர்நாடக அரசு கோரியது.

இதுகுறித்து அவர் அரசிடம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல. இந்த தீர்ப்பில் பல அடிப்படை கூட்டுத்தொகை பிழைகளும் சட்டரீதியான தவறுகளும் உள்ளன. குற்றவியல் வழக்குகளில் சட்ட ரீதியான முடிவை எட்டும்வரை மேல்முறையீடு செய்யலாம்.

நீதி நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே கடந்த 2003-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக நீதித்துறை, அரசு மற்றும் அரசு வழக்கறிஞர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலே உச்ச‌ நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. எனவே நீதியை நிலைநாட்டும் விதமாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது கர்நாடக அரசின் கடமையாகிறது.

கால தாமதம் கூடாது

ஜெயலலிதாவின் விடு தலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அரசியல் சாசனத் தின்படி கர்நாடக அரசுக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே இதற்கு ஆளுநரின் முன் அனுமதி தேவையில்லை. அதேபோல மேல் முறையீட்டு வழ‌க்கில் வாதிட அரசு வழக்க‌றிஞரை நியமிக்கவும் கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் க‌ர்நாடக சட்ட அதிகாரிகள் நியமன சட்ட விதிகள் 1977-ன் படி க‌ர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞரை நியமிக்க முழு அதிகாரம் உள்ளது. இவ்வழக்கைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்பதால் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கலாம். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத் திற்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஓரிரு நாட்களில் முடிவு

இது தொடர்பாக கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா கூறியதாவது: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வ தற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. தீர்ப்பு வெளியாகி 20 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவசரம் காட்ட அரசு விரும்பவில்லை.

இவ்வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்தை பெற்ற பிறகுதான் முடிவெடுக்க முடியும்.

கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் அளித்த அறிக்கையை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும். இந்த விவகாரத்தில் ஓரிரு நாட்களில் முடிவெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

நாளை அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில் கர்நாடக அமைச் சரவைக் கூட்டம் பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. அதில் ஜெயலலிதா வழக்கு மேல்முறையீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in