

துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒருவர்.
இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ நீதிபதி விடுப்பில் இருப்பதால், துளசிராம் போலி என்கவுன்டர் வழக்கில் அனைத்து வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் நீதிமன்றத்தில் ஆஜரானதை நீதிமன்ற ஊழியர்கள் பதிவு செய்து கொண்டனர். பின்னர் இவ்வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் அமித்ஷா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடந்த மே 9-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. முன்னதாக இவ்வழக்கு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் பாஜக தலைவர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகா அமித்ஷா மற்றும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேர் மீது கடந்த செப்டம்பரில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தாதா சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர் பீ ஆகியோரை குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீஸார் ஹைதராபாத்தில் இருந்து கடத்திச் சென்று, 2005 நவம்பரில், காந்தி நகர் அருகே போலி என்கவுன்ட்டரில் கொன்றதாக சிபிஐ தெரிவிக்கிறது.
போலி என்கவுன்ட்டரை துளசிராம் பிரஜாபதி நேரில் பார்த்தவர் என்பதால், அவர் குஜராத் மாநிலத்தின் சாப்ரி கிராமத்தில் 2006 டிசம்பரில் போலீஸாரால் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பான சதி ஆலோசனையில் அப்போதைய அமைச்சர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.