

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும்ஆந்திர மாநில முன்னாள்முதல்வருமான என்.டி.ராமாராவின் 92-வது பிறந்த நாள் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று கொண்டாடப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள என்.டி.ஆர். சமாதிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன்கள் பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மகள் புரந்தரேஸ்வரி, மனைவி லட்சுமி பார்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
ஹைதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி மாவட்டம், கண்டிபேட்டாவில் நடைபெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சியின் 34-வது மாநாட்டின் 2-வது நாளான நேற்று சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:
ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர் என்.டி.ஆர். குறிப்பாக, 1983-ம் ஆண்டிலேயேஉணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார். பின்தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளித்தார். தெலுங்கர்களின் அடையாளமாக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.
என்.டி.ராமாராவ் பெயரில் வரும் தசரா பண்டிகை முதல் ஆந்திரா வில் ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப் படும். இதற்காக ரூ.400 கோடி ஒதுக்கப்படும். இதன்மூலம் 1.86 கோடி மக்கள் பயனடைவர். இவ் வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
பின்னர் என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டு மென மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.