

இந்திய, சீன நிறுவனங்கள் இடையே சுமார் ரூ.1.40 லட்சம் கோடிக்கு நேற்று வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இருநாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
சீன சுற்றுப் பயணத்தில் மூன்றாவது நாளான நேற்று ஷாங்காயில் நடைபெற்ற இந்திய, சீன தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில் இரு நாடுகளையும் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் இந்திய, சீன நிறுவனங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு, உருக்கு, சூரியசக்தி ஆகிய துறைகளில் மொத்தம் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாகும். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் சீன நிறுவனங்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். உலகின் தொழிற்சாலையாக சீனா விளங்குகிறது. அதேபோல உலகத்தை பின்னணியில் இருந்து இயக்கும் அலுவலகமாக இந்தியா செயல்படுகிறது. இரு நாடுகளும் கைகோத்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்
முன்னதாக ஷாங்காய் நகரில் உள்ள புடான் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனை, இந்திய ஆய்வு மையத்தை தொடங்கிவைத்து மோடி பேசியதாவது:
உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பேர் இந்தியா, சீனாவில் வசிக்கிறார்கள். எனவே உலகமே பயனடைய வேண்டும் என்றால் சீனாவும் இந்தியாவும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியிலும் நாகரிக ரீதியிலும் நீண்டகால உறவு உள்ளது. இந்த இருநாடுகளும் இணைந்து புதிய உலகை படைக்கலாம்.
உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்துக்கும் வெப்பமய மாதலுக்கும் காந்தியின் போதனைகளில் தீர்வு உள்ளது. 21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கு உரித்ததாகும். இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால் வறுமையை விரட்டியடிக்க முடியும். புத்தரின் போதனைகள், மகாத்மா காந்தியின் சத்திய சோதனை ஆகியவற்றை உள்ளடக்கிய முன்னேற்றப் பாதையில் புதிய உச்சத்தை எட்ட சீனாவும் இந்தியாவும் கூட்டாகச் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பிறந்த காந்தி உலகத்தின் மகானாக மதிக்கப்படு கிறார். அவர் இன்றைக்கும் தேவைப்படுகிறார்.
அறிவு என்று பார்த்தால் அதை கிழக்கு, மேற்கு என்று பார்க்க முடியாது. எந்த அறிவும் மானுடத் துக்கு பயன்தரத்தக்கதே. பலனைப் பாராமல் உழை என்பதுதான் பகவத் கீதை தரும் உபதேசம். இந்தியாவும் சீனாவும் பண்டைய காலத்திலிருந்தே அறிவைத் தேடுபவை ஆகும். பல நூற்றாண்டு களுக்கு முன்பே சீன அறிஞர் யுவான் சுவாங் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
இவ்வாறு மோடி பேசினார்.
ஷாங்காயில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசியபோது, ‘‘நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை யாரும் குறைகூற மாட்டார்கள். கடினமாக உழைப்பதால் கண்டனக் கணைகளை வீசுகிறார்கள். சில தலைவர்கள் (ராகுல் காந்தி) 56 நாட்கள் ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறார்கள். நான் அப்படி ஓய்வெடுக்கவில்லை. இந்திய மக்களுக்காக அயராது உழைக்கிறேன்’’ என்று அவர் தெரிவித்தார்.
மங்கோலியா பயணம்
சீனாவில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று ஷாங்காயில் இருந்து மங்கோலியாவுக்கு புறப்பட்டார். இதுகுறித்து மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சீனாவில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு நன்றி, இந்திய, சீன உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.