Published : 05 Mar 2014 11:21 AM
Last Updated : 05 Mar 2014 11:21 AM

மக்களவைத் தேர்தல் ஏப்.7-ல் தொடக்கம்: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.24-ல் வாக்குப் பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழகம் (39 தொகுதிகள்), புதுச்சேரியில் (1 தொகுதி) ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

புது டெல்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார். தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜய்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மக்களவைத் தேர்தலில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிக கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுவது இப்போதுதான். ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. 543 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் மொத்தம் 81.4 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

தேர்தல் தொடங்கும் முதல் நாளான 7-ம் தேதி அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ம் தேதி அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளில் ஏப்ரல் 10-ம் தேதியும், 3 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் ஏப்ரல் 12-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும்.

மிக அதிகபட்சமாக ஏப்ரல் 17-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

ஏப்ரல் 30-ம் தேதி 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளிலும், மே 7-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளிலும், இறுதியாக மே 12-ம் தேதி 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம் (தெலங்கானா, சீமாந்திரா), ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படவுள்ளன.

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய தொகுதி வரையறையின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஏப்ரல் 30 மற்றும் மே 7-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ம் தேதி தெலங்கானா பகுதியில் உள்ள 17 மக்களவைத் தொகுதி, 119 சட்டமன்றத் தொகுதிகளிலும், மே 7-ம் தேதி சீமாந்திரா பகுதியில் உள்ள 25 மக்களவைத் தொகுதி, 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறுகையில், “தேர்தல் கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இந்த தேர்தல், இந்திய ஜனநாயக வரலாற்றின் மைல் கல்லாக இருக்கும்.

அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைக் காப்பாற்றும் வகையில் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளை கண்ணியத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும். வேட்பாளர்களின் செலவுக் கணக்கை தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்வோம்.

ஆலந்தூரில் இடைத்தேர்தல்

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த டிசம்பர் 10-ம் தேதி ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆலந்தூர் தொகுதிக்கு ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x