42 ஆண்டுகள் உயிருக்கு போராடி இறந்த நர்ஸ்: வார்டு பாய் மீது கொலை வழக்கு பதிவாகுமா?

42 ஆண்டுகள் உயிருக்கு போராடி இறந்த நர்ஸ்: வார்டு பாய் மீது கொலை வழக்கு பதிவாகுமா?
Updated on
1 min read

42 ஆண்டுகள் உயிருக்குப் போராடி இறந்த மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் விவகாரத்தில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய வார்டு பாய் சோகலால் பரத வால்மீகி மீது தற்போது உத்தரப் பிரதேசத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்வது குறித்து சட்டரீதியிலான கருத்துகளை கேட்டறிந்த பிறகு முடிவு செய்யப்படும் என மும்பை போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த 1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, மும்பை கிங் எட்வர்டு நினைவு (கே.இ.எம்.) மருத்துவமனையில் அருணாவை கொடூரமாக தாக்கி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை வால்மீகி நெரித்ததால், அவர் சுயநினைவு இழக்கும் நிலைக்கு ஆளானார்.

42 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த அருணா, கே.இ.எம். மருத்துவமனை நர்ஸ்களால் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வால்மீகி தாக்குதல், வழிப்பறி ஆகியவற்றுக்காக மட்டுமே தண்டிக்கப்பட்டார். பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் முறைகேடு வழக்கில் தண்டிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற வால்மீகி 1980-ம் ஆண்டு விடுதலை பெற்றார். அதன் பிறகு அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் வால்மீகி தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாக ‘சகால் டைமஸ்’ என்ற மராத்தி நாளேட்டில் நேற்று செய்தி வெளியானது. இந்த நாளேட்டின் செய்தியாளர் ஒருவர், உ.பி.யின் காசியாபாத் மாவட்டம், பர்ப்பா என்ற கிராமத்தில் வால்மீகியை கடந்த புதன்கிழமை சந்தித்துள்ளார். தற்போது தொழிலாளியாக வேலை பார்க்கும் வால்மீகி, “துயரமிக்க அந்த நாளில் என்ன நடந்தது என்பதை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் “உங்களைப் போன்ற நபர்கள் (பத்திரிகையாளர்கள்) அந்த சம்பவத்தை பாலியல் பலாத்காரம் என்று ஏன் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

வால்மீகி தற்போது உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்வது குறித்து பரிசீலிப்பீர்களா என மும்பை காவல்துறை இணை ஆணையர் தேவன் பார்தியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதில் அளிக்கும்போது, “அருணா தற்போது நிமோனியாவால் இறந்துள்ளார் என்பதால் பழைய வழக்கில் தற்போது புதிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. அவரை கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என மும்பை பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில், அருணாவை இயற்கை மரணம் அடைய விடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் அருணா நிமோனியாவால் இறந்துள்ளதால், அவரது மரணத்துக்கு நிமோனியாதான் உடனடி காரணமாகத் தெரிகிறது. என்றாலும் சட்டரீதியிலான கருத்துகளை கேட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in