

பருவமழைக் காலத்தில் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க ஒட்டுமொத்த தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரதமரிடம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
22 கடல் மைல் தொலைவு வரையிலான, இந்தியாவுக்கு முழு உரிமை உடைய பொருளாதார மண்டலத்தில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மீன்பிடிப்பதற்கு ஒட்டுமொத்த தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கேரளத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநில முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளனர்.
பருவமழைக் காலத்தில் மீன்பிடித்தல் தொடர்பான மத்திய அரசின் புதிய வழிகாட்டு விதிகள் குறித்து கேரள மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.
இதன் பிறகு முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒட்டுமொத்த தடையால் மீனவ சமுதாயமும் கேரள மாநிலமும் பாதிக்கப்படும். மாநிலத்தின் எதிர்ப்பை பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளேன். பருவமழைக் காலத்தில் 47 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வழக்கமாக விதிக்கப்படும் தடையை ஏற்கிறோம். ஒட்டுமொத்த தடையை கேரள அரசு எதிர்க்கிறது. 12 கடல்மைல் வரை ஒட்டுமொத்த தடை விதிக்க கூடாது என எங்கள் நிலையை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம்” என்றார்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முடிகள் குறித்து உம்மன் சாண்டி கூறும்போது, “மனவளர்ச்சி குன்றிய குழந்தை களுக்காக கேரளத்தில் 278 சிறப்பு பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு பள்ளி மட்டுமே அரசால் நடத்தப் படுகிறது. இந்நிலையில் 100 மாணவர்களுக்கு மேல் உள்ள 23 தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளாக மேம் படுத்தப்படும்” என்றார்.