Published : 17 May 2015 06:04 PM
Last Updated : 17 May 2015 06:04 PM

அரசு வேகமாகவே செயல்படுகிறது: நிதியமைச்சர் ஜேட்லி

"தற்போதைய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது, இந்த வேகத்தை தொடரவே விரும்புகிறோம். அதேவேளையில், சர்வதேச மந்தநிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தியாவுக்கு சவாலாக உள்ளன" என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

பா.ஜ.க அரசின் இரண்டாம் ஆண்டு திட்டங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பேட்டியில் கூறியது:

வரி விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மறைமுக வரியான, சரக்கு மற்றும் சேவை வரி வரும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான்கு வருட காலத்தில் இந்த இலக்கு எட்டப்படும். கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதால் அதில் இருக்கும் விதிவிலக்குகளும் குறைக்கப்படும். ஆனால் தனிநபர்களுக்கு விதி விலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தொழில் துறைக்கு பெரிய திட்டம்

தொழில் புரிவதற்கான சூழலை உருவாக்க பெரிய திட்டம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேறும்போது முதலீடுகள் அதிகரிக்கும். அதேபோல திட்டங்களும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படும்.

அரசு எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் சிலருக்கு இருந்தாலும், அரசு வேகமாக முடிவெடுத்து வருகிறது. இதனால் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சிக்கு மேல் இருக்கும் என்று முதலீட்டாளர்கள் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போதைய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது, இந்த வேகத்தை தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அதே சமயத்தில் சர்வதேச மந்தநிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தியாவுக்கு சவாலாக உள்ளன.

ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்த சில காலம் ஆகும். தற்போதைய சர்வதேச மந்தநிலையிலே 7.5 முதல் 8 சதவீத வளர்ச்சி என்பது சிறப்பானது.

நாங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஒரே திசையில் உள்ளது. இதில் மாறுபட்ட கருத்துக்கோ, குழப்பத்துக்கோ இடமில்லை. அரசாங்கத்தை தவிர வேறு எங்கும் எங்களது கவனம் இல்லை" என்றார் ஜேட்லி.

அதேவேளையில், பொருளாதார நடவடிக்கைகள் என்பது அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறது. செயல்பாடுகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று சில நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டை அருண் ஜேட்லி நிராகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x