

கர்நாடகத்தை கலங்க வைத்துள்ள ஒற்றை இலக்க லாட்டரி முறை கேட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பரிந்துரை செய்துள்ளார். இதில் பல முக்கிய தலைவர்களும், அதிகாரிகளும் சிக்குவார்கள் என கூறப்படுவதால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு கர்நாடகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக எல்லையோர மாவட்டங் களில் ஒற்றை இலக்க லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறு வதாக தகவல் வெளியானது.
சிஐடி போலீஸ் விசாரணையில், கோலார் தங்கவயலைச் சேர்ந்த பாரி ராஜன் உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
எனவே சிஐடி போலீஸார், பாரி ராஜனை (56) கடந்த 17-ம் தேதி கைது செய்து விசாரித்தனர். அப்போது ஒற்றை இலக்க லாட்டரி முறைகேட்டில் பெங்களூரு போலீஸ் கூடுதல் கமிஷனர் அலோக்குமார், ஐபிஎஸ் அதிகாரிகள் தர்னேஷ் மற்றும், நாகராஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே கர்நாடக அரசு கடந்த வாரம் மூவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மூத்த அமைச்சர்களுடன் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:
குமாரசாமி, எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆட்சி காலத்தில் லாட்டரி முறைகேடு அமோகமாக நடந்துள்ளது. எனது தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சியில் லாட்டரி முறைகேடுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. எதிர்க்கட்சிகளின் போராட்டம் அரசியல் உள் நோக்கம் உடையது என்றா லும், குற்றவாளிகள் தப்பிப்பதை அனுமதிக்க முடியாது.
ஒற்றை இலக்க லாட்டரி விவகாரத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. எனவே எதிர்க் கட்சிகளுக்கும், மக்களுக்கும் அரசு மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், இவ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன் என்றார்.