ஜெயலலிதா விடுதலையை எதிர்த்திட தவறினால் ஊழலை ஊக்குவிப்பதாக அமையும்: ஆச்சார்யா

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்திட தவறினால் ஊழலை ஊக்குவிப்பதாக அமையும்: ஆச்சார்யா
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தவறினால், அது உயர்மட்ட அளவில் நடக்கும் ஊழலை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும் என்று கர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அறிவுறுத்தியிருப்பதாக தெரிகிறது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா பரிந்துரைத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக, அவர் உரிய வகையில் சட்ட ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறாராம்.

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் மட்டுமே, பொது நிர்வாகத்தில் ஊழல் நடப்பதை ஒருபோதும் அனுமதிப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை சமூகத்துக்கு அரசு தெளிவுபடுத்தும் சாத்தியம் உண்டு என்று ஆச்சார்யா எடுத்துரைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ள முடிவுக்காக, தமிழக அரசியல் கட்சிகள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், அம்மாநில அரசுக்கு தெளிவான பரிந்துரைகளை ஆச்சார்யா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேல்முறையீடு அவசியம் - ஏன்?

முன்னதாக, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அதிகாரப்பூர்வமாக அரசுக்கு அளித்த பரிந்துரையில், "ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல அடிப்படை தவறுகள் இருக்கின்றன.

குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாங்கிய கடன், கட்டிட மதிப்பீடு, சுதாகரனின் திருமண செலவுகள் ஆகியவற்றை நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொண்ட விதம் சட்டத்துக்கு எதிராக இருக்கிறது.

இவ்வழக்கில் கூட்டுச்சதி, பினாமி சட்டத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதனை ரத்து செய்தது தொடர்பாக நீதிபதி குமாரசாமி போதிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேல்முறையீட்டு தகுதியானது. தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி குமாரசாமி நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பில் பெற்ற கடன்களை கணக்கிட்டதில் கூட்டுத்தொகை பிழையாகி இருக்கிறது. அதனை சரியாக கணக்கிட்டு இருந்தால் நால்வரையும் வழக்கில் இருந்து விடுவித்து இருக்க முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இது குறித்த இறுதி முடிவு எடுப்பதில் கர்நாடக அரசு நிதானம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in