

மதுபான பார் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணி மற்றும் சுங்க அமைச்சர் பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கேரள தலை மைச் செயலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை யிலான இடதுசாரிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தவிர, காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) கூட்ட ணியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விலகிய கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் பிள்ளையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறும்போது, "பார் ஊழல் வழக்கில் மாணி மற்றும் பாபு ஆகியோருக்கு எதிரான சாட்சியங்கள் மேலும் மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே அவர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் இருவரையும் உண்மை அறியும் 'லை டிடெக்டர்' சோதனைக்கு உட்படுத்த வேண்டும்" என்றார்.
கேரளத்தில் உள்ள பார்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கு லஞ்சம் பெற்றதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர்கள் மாணி மற்றும் பாபு ஆகிய இருவர் மீது கேரள பார் ஹோட்டல் உரிமை யாளர் சங்கத்தின் தலைவர் பிஜு ரமேஷ் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித் தன. அதன் விளைவாக மாணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். மேலும் பாபு மீது விசாரணை மேற்கொள்வதற்கு அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.