ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
Updated on
2 min read

ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி குமாரசாமி பிறப்பித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு உடனடியாக தடைகோர வேண்டும் என முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தினார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. நீதிபதி குமாரசாமி வழங்கிய இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பெங்களூரு வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, `சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு கர்நாடக அரசு உடனடியாக தடை வாங்கி, மேல்முறையீடு செய்ய வேண்டும்' என வலிறுத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து ஜி.கே.மணியிடம் கேட்டபோது, “ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி எழுதிய தவறான தீர்ப்பால், நீதியை நிலைநாட்ட முயற்சித்த கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் உழைப்பு வீணாகிவிட்டது. ஜெயலலிதாவின் கடன் தொகையை சரியாக கணக்கிட்டால் அவரது வருமானத்துக்கு அதிகமான சொத்துமதிப்பு 76.75 சதவீதமாக இருக்கும். தீர்ப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ள நிலையில் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக முயற்சி செய்கிறார். உடனடியாக கர்நாடக அரசு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைகோரி மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தை சித்தராமையாவிடம் கொடுத் துள்ளோம். சித்தராமையாவும் எங்களது கோரிக்கைக் குறித்து பரிசீலனை செய்து, விரைவில் முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார்''எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பாமகவினர் கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, தலைமை செயலர், சட்டத்துறை செயலர், தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோருக்கும் கடிதம் அளித்தனர்.

‘ஓரிரு நாட்களில் முடிவு’

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகல் இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தீர்ப்பின் நகலில் பிழைகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் அதை ஆராயும் பணியில் சட்ட நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர், அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரிடமும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட‌வில்லை என ஆச்சார்யா கூறியதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தீர்ப்பை முழுமையாக படித்த பிறகு, மேல்முறையீடு குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். இந்த வழக்கில் திமுக, அதிமுக என்ற அரசியல் கணக்குகளை கடந்து கர்நாடக அரசு சட்ட ரீதியான முடிவை எடுக்கும். இதில் முடிவெடுக்க கர்நாடக அரசுக்கு எந்த‌ அரசியல் நெருக்கடியும் இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in