

நரேந்திர மோடியை விமர்சித்த எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தியைக் (81) கண்டித்து பெங்களூரில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கன்னட எழுத்தா ளர்கள் சங்கம் புதன்கிழமை போலீஸில் புகார் அளித்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதும் அவரை கடுமையாக விமர்சித்தார். மேலும் ‘மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்றும் கூறினார். இதற்கு பாஜக தலைவர்களும் தொண்டர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும், அவரது வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் ‘மோடி பிரதமராகிவிட்டார். யூ.ஆர்.அனந்தமூர்த்தி கூறியபடி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து நமோ அமைப்பினரும், ஷிமோகாவை சேர்ந்த பா.ஜ.க. இளைஞர் அணியினரும் அவர் பாகிஸ்தானுக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். .
அனந்தமூர்த்தியை தொடர்ந்து மிரட்டி வரும் பாஜகவினரைக் கண்டித்து எழுத்தாளர் மரளு சித்தப்பா தலைமையில் கன்னட எழுத்தாளர்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு மவுனப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அவருக்கு வரும் மிரட்டல் தொலைபேசிகள் குறையாததால் மூர்த்திக்கு ஆதரவாக ‘கர்நாடக தலித் சங்கர சமிதி'ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. மேலும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு பெங்களூரில் உள்ள 'கன்னட சாஹித்ய பரிஷத்' என்ற எழுத்தாளர் அமைப்பின் கட்டிடத்திலும், அனந்தமூர்த்தியின் வீட்டுச் சுவரிலும் பாஜகவினர் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த எழுத்தாளர்கள் போஸ்டர்களை அகற்றினர்.
மேலும் ‘கன்னட சாஹித்ய பரிஷத்'அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான பண்டலிகா ஹலம்பி போஸ்டர் ஒட்டிய பா.ஜ.க.வினருக்கு எதிராக பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். இது தொடர்பாக அவரிடம் ‘தி இந்து' சார்பாக பேசினோம்.
‘‘கர்நாடகாவின் மூத்த எழுத்தா ளரான அனந்தமூர்த்தி யைக் குறிவைத்து பா.ஜ.க.வினர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை கள் கண்டனத்திற்குரியவை. கருத்துரிமை மிக்க நாட்டில் அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. இதனை அரசியல் நாகரீகத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் அதனை விடுத்து, ‘அனந்த மூர்த்தியே உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேறி, பாகிஸ்தானுக்கு செல்லா விட்டால் பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேடும்' என கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது, ‘பொது இடத்தில் அனுமதியின்றி அநாகரீகமாக போஸ்டர் ஒட்டியதற்காக 1981-ம் சட்டப்பிரிவுபடி போலீஸில் புகார் அளித்துள்ளேன்.
மேலும் போஸ்டரில் இருந்த சிலருடைய பெயரையும் அவர்களுடைய தொலைபேசி எண்களையும் ஒப்படைத்துள்ளேன். மற்றபடி, இதற்கும் அனந்தமூர்த்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது தொடர்பாக அவரிடம் நான் எதுவும் பேசவில்லை'' என்றார்.