

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழைக்கான சூழல்கள் மந்தமாக இருப்பதால், கணிக்கப்பட்ட தேதியில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையத் துறை அறிவித்துள்ளது.
கேரளத்தில் பொதுவாக ஜூன் 1ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு மே 30ம் தேதியே பருவமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அங்கு பருவமழைக்கான சூழல்கள் மந்தமாக இருப்பதால், மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் "மே 16ம் தேதி அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில், கணிக்கப்பட்ட 3 நாட்களுக்கு முன்னரே பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன் பிறகு அவ்வளவு முன்னேற்றம் எதுவும் இல்லை. பின்னர் மே 21ம் தேதி வங்கக் கடல் வழியே இலங்கையில் தென் பகுதிகளில் பருவமழை பெய்தது. அங்கும் ஒரு வாரமாக எந்த முன்னேற்றமும் இல்லை. அரபிக் கடல் வழியாக கேரளத்தில் பருவமழை தொடங்குவது தாமதமாகும்" என்று கூறியுள்ளது.
"இதனை நாங்கள் தாமதம் என்று கூறமாட்டோம். வேண்டுமானால், பருவமழை தொடங்குவது மந்தமாகி இருக்கிறது எனலாம். எனினும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே கர்நாடகா மற்றும் கேரளத்தில் மழை பெய்யவே செய்கிறது" என்று வானிலைத் துறை கூறியுள்ளது.
கேரளாவில் 3 அல்லது 4 நாட்கள் சென்ற பிறகு பருவ மழை பெய்யத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.