சீன சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா சென்னையில் சீன தூதரகம்

சீன சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா  சென்னையில் சீன தூதரகம்
Updated on
2 min read

சென்னையில் சீனத் துணைத் தூதரகமும், சீனாவின் செங்டு நகரில் இந்தியத் துணைத் தூதரகமும் அமைக்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சீனாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ரயில்வே, சுரங்கத்துறை, விண்வெளி ஆய்வு, நிலநடுக்க ஆராய்ச்சி அறிவியல், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொத்தம் 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருநாட்டுத் தலைவர் களும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். நரேந்திர மோடி பேசும்போது, “இந்தியா - சீனா இடையே வலுவான நட்புறவை ஏற்படுத்த புதிய பாதையை வகுக்க இருநாடுகளும் முனைப்புடன் செயல்படும். விசா விவகாரம், இந்திய - சீன எல்லையை ஒட்டிய நதி நீர்ப் பிரச்சினைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றவர்கள் விருப்பங்களை கருத்தில் கொண்டு சுமுக தீர்வை எட்ட வேண்டும்.

சென்னையில் சீனத் துணைத் தூதரகமும், சீனாவின் செங்டு நகரில் இந்தியத் துணைத் தூதரகமும் தொடங்குவது உட்பட மொத்தம் 24 ஒப்பந்தங்கள் இந்தியா சீனா இடையே கையெழுத்தாகியுள்ளன.

எல்லைப் பிரச்சினையை பொறுத்தவரையில் இரு நாடுகளுக்கும் நியாயம் செய்யும், இருதரப்புக்கும் ஏற்புடைய தீர்மானத்தை கொண்டுவர நாங்கள் உடன்படுகிறோம்.

அதேவேளையில், இந்தியா - சீனா பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக இருக்கும் ஒரு சில கொள்கைகளை சீனா மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மேக் இன் இந்தியா திட்டம், மற்றும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் ரயில் திட்டங்களுக்கும் சீனா உதவியளித்து வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் இந்தியாவின் ஆண்டாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு இந்தியாவில் சீனாவின் ஆண்டாக இருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமர் மோடிக்கு சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று மதிய விருந்து அளித்தார். நேற்று மாலையே ஷாங்காய் நகருக்கு மோடி புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா சீனா இடையே இன்று ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியா சீனாவைச் சேர்ந்த தொழில் நிறுவனங் களிடையே இந்த ஒப்பந்தங்கள் ஏற்படவுள்ளன. மொத்தம் 20 ஒப்பந்தங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காயில் இன்று சீனாவின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச இருக்கிறார்.

சீனாவின் டின்ங்சுவா பல்கலைக்கழகத்தில் பேசிய மோடி, இந்தியாவும் சீனாவும் தொன்மையான உறவை கொண்டுள்ள நாடுகள் என்பதால், இந்தியா வரும் சீன சுற்றுலா பயணிகளுக்கு எலெக்ட்ரானிக் சுற்றுலா விசா வழங்கப்படும் என்று திடீரென தெரிவித்தார்.

சீன அதிபரும், பிரதமரும்..

சீனாவில் அதிபர்தான் நாட்டின் அதிகாரமிக்க தலைவராக இருப்பார். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்தான் சீன பிரதமர். பெரும்பாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்தான் நாட்டின் அதிபராக பதவி வகிப்பார். 1954-ம் ஆண்டு மா சேதுங் சீன குடியரசின் அதிபர் பதவியை உருவாக்கி, முதல் அதிபராகவும் பதவி வகித்தார்.

சீன அரசியல்சாசன சட்டப்படி சீன பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உண்டு. சீன குடியரசு கட்சியின் பிற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் பதவி யாருக்கு என்பதை அதிபர் அறிவிப்பார்.

அதிபர் நியமிக்கும் பிரதமர், தேசிய மக்கள் காங்கிரஸால் (சீன நாடாளுமன்றம்) அங்கீகரிக்கப்பட வேண்டும். பெரும்பாலும் இந்த விஷயத்தில் அதிபரின் கருத்துக்கு மாற்றுக் கருத்து நாடாளுமன்றத்தில் இருக்காது. சீனா 2987 உறுப்பினர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாளுமன்றத்தை உடையது.

சீன அதிபர் தேர்தலில் 45 வயதுக்கு மேற்பட்ட சீன குடிமகன்கள் மட்டுமே போட்டியிட முடியும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஒருவர் இருமுறை தொடர்ந்த அதிபர் பதவி வகிக்கலாம். சீன நாடாளுமன்றம்தான் சீன அதிபரை தேர்வு செய்யும். அவரை நீக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு உண்டு. சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அதிபர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும்.

நாட்டில் அவசர நிலையை அறிவிப்பது, பிரதமர், அமைச்சர்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்வது உட்பட உச்ச அதிகாரங்கள் அனைத்தும் அதிபருக்கு உண்டு. அதே நேரத்தில் நாட்டு வளர்ச்சிக்கான திட்டமிடுதல், அமல்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களை கவனிப்பது சீன பிரதமரின் முக்கியப் பணி. சீன ராணுவத்துக்கு பிரதமர் கட்டளை எதுவும் பிறப்பிக்க முடியாது. சீன மாகாண கவுன்சிலின் தலைவராக பிரதமர் இருப்பார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர்தான் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in