

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரான ஆச்சார்யா, பெங்களூருவில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கும் போது சொத்துகளை மதிப்பீடு செய்தது பிழையாக இருக்கிறது. அபிராமபுரம் இந்தியன் வங்கி கிளையில் குற்றம் சாட்டப்பட்டோர் வாங்கிய கடன்களை கூட்டுவதில் கூட பிழை நடந்துள்ளது. அதாவது நீதிபதி பட்டியலிட்டுள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் ரூ.1,50,00,000, குணபூசனியிடம் இருந்து மாற்றப்பட்ட கடன் ரூ.3,75,00,000, ஜெயலலிதா நேரடியாக பெற்றக் கடன் ரூ.90,00,000, ஜெ ரியல் எஸ்டேட் நிறுவனம் பெற்ற கடன் ரூ.25,00,000, ஜெ.எஸ். ஹவுசிங் நிறுவனம் பெற்றக் கடன் ரூ.12,46,000, ஜெ. பார்ம் ஹவுஸ் நிறுவனம் பெற்றக் கடன் ரூ.50,00,000, சசிகலா நேரடியாக பெற்றக் கடன் ரூ.25,00,000, சுதாகரன் நேரடியாக பெற்றக் கடன் ரூ. 1,57,00,000, ராமராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனம் பெற்றக் கடன் ரூ.1,65,00,000, மகாலட்சுமி திருமண மண்டபம் பெற்ற கடன் ரூ.17,85,274 ஆகியவற்றை கூட்டினால் ரூ.10,67,31,274 வரும். ஆனால் நீதிபதி ரூ. 24,17,31,274 என தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில்தான் ஜெய லலிதாவின் வருமானத்துக்கு அதிக மான சொத்து விகிதம் 8.12 சதவீதம் (2.82 கோடி) என கூறியுள் ளார். ஆனால் உண்மையான கடன் தொகையை (ரூ.16.34 கோடி) வைத்து கணக்கிட்டு பார்த்தால் அவரது வருமானத்தைவிட 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளது தெரிய வருகிறது. இந்த சதவீதத் தின் அடிப்படையில் பார்த் தால் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளி களாகத்தான் அறிவிக்க வேண்டும்.
நீதிபதி குமாரசாமியின் இந்த ஒரே தவறை வைத்துக்கொண்டே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அநேகமாக இரண்டு மூன்று நாட்களில் அனைத்தும் அலசப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தெரிவிப்பேன்.
குற்றவியல் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சிவில் வழக்குகளில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் இந்த வழக்கு குற்றவியல் வழக்கு என்பதால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், நேரடியாக தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரும் மனுவைக் கூட தாக்கல் செய்ய முடியும். இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன். அதன் அடிப்படையில் குமாரசாமியின் தீர்ப்புக்கு தடை கோருவதா, மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
ஜெயலலிதாவின் தீர்ப்பு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமை யாவிடம், ‘தி இந்து' சார்பாக கேட்டபோது, “இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்த முடிவை கர்நாடக அரசு எடுக்கும். கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு ஜெயலலிதா அரசியல் சாயம் பூசக்கூடாது'' என்றார்.