Published : 22 May 2014 12:00 AM
Last Updated : 22 May 2014 12:00 AM

ஆசிரியையாக இருந்து முதல்வராகும் ஆனந்திபென்

குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆனந்திபென் படேல் (73), தான் ஏற்றுக்கொண்ட பணிகளை செய்து முடிக்கும் வரை ஓயாமல் பாடுபடக்கூடிய கடின உழைப்பாளி. மிகவும் கண்டிப்பானவர்.

குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவுக்கு படேல் சமூகம் ஆதரவாக இருந்து வருகிறது. அக்கட்சி பெறும் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் அச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆனந்திபென் படேல் முதல்வராக்கப் பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த மாநிலத்தில் செல்வாக்குமிக்க சமூகங்களில் படேல் சமூகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான ஆனந்தி பென் படேல், அமைச்சரவையில் ஏற்கெனவே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மோடி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் குழுத் தலைவராக பொறுப்பேற்று மாநில நிர்வாகத்தை ஆனந்திபென்தான் கவனித்து வந்தார்.

நகர்ப்புற மேம்பாடு, வருவாய், பேரிடர் மேலாண்மை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக ஆனந்திபென் பதவி வகித்துள்ளார். மோடி கொண்டு வந்த பெண் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆனந்திபென் முக்கிய பங்காற்றினார்.

குஜராத்தில் அமித் ஷாவும், ஆனந்தி பென்னும் மோடியின் இரு கரங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர். 1941-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி மெஹ்ஸானா கிராமத்தில் உள்ள கரோத் கிராமத்தில் பிறந்தவர் ஆனந்திபென். எம்.எஸ்.சி., எம்.எட் படித்துள்ளார். இவரது தந்தை ஜேதாபாய் படேல், விவசாயி ஆவார். தனது கணவர் மபத்பாய் படேலை பிரிந்து வாழும் ஆனந்திபென்னுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஆசிரியையாக பணியாற்றிய போது, சர்தார் சரோவர் அணையில் மூழ்கிய 2 சிறுமிகளை ஆனந்திபென் காப்பாற்றினார். இதையடுத்து மாநில அரசின் வீரதீரத்திற்கான விருதைப் பெற்றார்.

இதனால் பல தரப்பிலும் பாராட்டு பெற்ற ஆனந்திபென்னை, அரசியலில் இணைந்து செயல்படுமாறு பாஜக தலைவர்கள் அழைத்தனர். இதையடுத்து 1980-களின் இறுதியில் பாஜகவில் சேர்ந்தார். அப்போது ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த மோடியும் பாஜகவில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

1992-ம் ஆண்டு அப்போதைய பாஜக தேசியத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பங்கேற்ற ஒரே பெண் ஆனந்திபென் ஆவார். அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 1998-ம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் வெற்றிபெற்ற ஆனந்திபென், கேசுபாய் படேல் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார்.

கேசுபாய்க்கு பின்பு முதல்வராக பதவியேற்ற மோடி, ஆனந்திபென்னுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஒதுக்கினார். அமைச்சராக தனது பணியை திறம்பட மேற்கொள்வதில் வல்லவர் ஆனந்திபென். தனது துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை மாநிலம் முழுவதும் பயணம் செய்து நேரில் பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அது தொடர்பாக அதிகாரிகளிடமும், மக்களிடமும் ஆலோசனை கேட்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x