

இந்திய-தென் கொரிய இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் பார்க் ஜியுனைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கும் ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான ஒப்பந்த உட்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும் இந்திய-தென் கொரிய ஒட்டுமொத்த பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கையின் கீழ் திரைப்படங்களை இணைந்து தயாரித்தல் உட்பட அனிமேஷன், மற்றும் ஒலிபரப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.
மின்சார உற்பத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். ஆற்றல் உற்பத்தி, சேகரிப்பு வினியோகம் ஆற்றல் சுயபூர்த்தி ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமாகும் இது.
மேலும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை வளர்ச்சி தொடர்பான 'ஒத்துழைப்புக்கான சட்டகம்' என்ற ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர, கப்பல் கட்டுமானம் மற்றும் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இதில் அடங்கும்.