ஆந்திரம், தெலங்கானாவில் வெயிலுக்கு இதுவரை 470 பேர் பலி: சென்னையில் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு

ஆந்திரம், தெலங்கானாவில் வெயிலுக்கு இதுவரை 470 பேர் பலி: சென்னையில் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு
Updated on
1 min read

ஞாயிற்றுகிழமை நிலவரப்படி சுட்டு எரிக்கும் வெயிலுக்கு ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் 290 பேரும், தெலங்கானாவில் 186 பேரும் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அலகாபாத் நகரில் பம்ராலியில் 47.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அனல் காற்றுக்கும் வெயிலுக்கும் 470 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்து சில நாட்களுக்கு வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்பில்லை என ஆந்திர மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் சேர்த்து மொத்தம் 470 பேர் பலியாகியுள்ள நிலையில், பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் கூலித் தொழிலாளிகள் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, இருமாநில அரசுகளும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவர்கள் பணி நேரத்தில் மாறுதல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில், வெள்ளிக்கிழமையன்று தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதும், உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் நேற்று 47.7 டிகிரி செல்சியஸ் பதிவானதுமே அதிகபட்ச வெப்பமாகும்.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பு:

கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் சில பகுதிகளில் இன்றைக்கும் (திங்கள்கிழமை) வெப்பக் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் டெல்லியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிப் புயலுக்கு வாய்ப்பு:

டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் புழுதிப் புயல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் (25,26 தேதிகள்) தமிழகம், புதுச்சேரியிலும் புழுதிப் புயல் வீசலாம் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in