

சாதி, மத ரீதியான பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் டைம் இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அப்போது, “சமீப காலமாக பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் சிறுபான்மையினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருவதால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அச்சமடைந்துள்ளதாகக் கூறுப்படுவது குறித்து தங்கள் கருத்து என்ன” என்று கேட்கப்பட்டது. இதற்கு மோடி கூறியதாவது:
சாதி, மத ரீதியான பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ எனது அரசு அனுமதிக்காது. எனவே, சிறுபான்மையினரின் உரிமை மீதான கற்பனையான அச்சத்துக்கு இடமே இல்லை.
எந்த ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினருக்கும் எதிராக, எந்த ஒரு தனி நபராவது கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரையில் பாஜக மற்றும் எனது தலைமையிலான அரசைப் பொருத்தவரை ஒரே ஒரு புனித நூல்தான் உள்ளது. அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல், தாய் மதத்துக்கு திருப்புதல், லவ் ஜிகாத் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்துத்துவா அமைப்புகள் நடத்தின. மேலும் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.
மேலும் பாஜகவைச் சேர்ந்த சிலர் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தனர். இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.