

நாட்டின் வளர்ச்சிக்கு தோள்களில் கலப்பையை ஏந்துங்கள் துப்பாக்கியை ஏந்தாதீர்கள் என மாவோயிஸ்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். ரூ.24,000 கோடி செலவில் இரண்டு திட்டங்களை மோடி இன்று தொடங்கி வைத்தார். ஒன்று தண்டேவாடா மாவட்டத்தின் தில்மிலி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு ஆலை. மற்றொன்று ராவ்காட் - ஜக்டால்பூர் இடையேயான ரயில் பாதை.
வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்துப் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் வளர்ச்சிக்கு தோள்களில் கலப்பையை ஏந்துங்கள் துப்பாக்கியை ஏந்தாதீர்கள். துப்பாக்கி கலாச்சாரத்தால் மாவோயிஸ்ட்கள் நடத்தும் நாடகம் முடிவுக்கு வரும். எதிர்காலத்தில் வன்முறைக்கு இடமில்லை. எதிர்காலம் அமைதியாக இருக்கப்போகிறது.
நக்சல் இயக்கத்தின் பிறப்பிடமான நக்சல்பாரியிலேகூட இப்போது அந்த இயக்கம் செயல்பாட்டில் இல்லை. கொடூர கொலைகளை அரங்கேற்றும் மாவோயிஸ்ட்களின் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்.
உங்கள் ஆயுதங்களை தூக்கி எரிந்துவிட்டு உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாரைச் சென்று பாருங்கள். உங்கள் மனம் மாற்றம் அடையும். அந்த சுய பரிசோதனை நீங்கள் ஆயுதத்தை கைவிட வழிவகுக்கும்" இவ்வாறு மோடி பேசினார்.