

டெல்லி முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்து வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று சந்தித்தார்.
சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு டெல்லி போலீஸ் அதிகாரிகள் உட்பட மத்திய அரசு அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கிய அடுத்த நாளே இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
ஆளுநருடன் ஊழல் தடுப்புப் பிரிவின் செயல்பாடு பற்றி அர்விந்த் கேஜ்ரிவால் விவாதித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தனது கருத்து என்ன என்பதையும் அவர் விளக்கியதாக தெரிகிறது.
இருவருக்கும் இடையே அதிகாரச் சண்டை தொடங்கியபிறகு இப்போதுதான் முதல்தடவையாக சந்தித்துப் பேசியுள்ளனர். முதல்வருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தலைமைச் செயலர் கே.கே.சர்மா ஆகியோரும் சென்றனர்.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பது மற்றும் காவல் துறை மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளில் துணை நிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சட்டப்பேரவையின் இரு நாள் கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் துணை நிலை ஆளுநருடன் முதல்வர் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
மே 21-ம் தேதி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த அறிவிக்கையானது மத்தியஅரசு அதிகாரிகள், மத்திய அரசில் உள்ள இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகள் மீது ஊழல் தடுப்புப்பிரிவு வழக்கு தொடுக்க தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையின் இரு நாள் கூட்டத்தின் விவாத விஷயங்கள் பற்றி துணைநிலை ஆளுநரிடம் விவரித்த கேஜ்ரிவால், சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற ஆளுநருடன் இணைந்து செ யல் பட தயாராக இருப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் அளித்து பிறப்பித்த சர்ச்சைக்குரிய அறிவிக்கை வெளியானதுமே கேஜ்ரிவால் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் அமர்த்திய மக்களின் முதுகில் மத்திய அரசு குத்திவிட்டதாக குற்றம்சாட்டிய கேஜ்ரிவால் ஊழல்வாதிகளை காத்திடவும் டெல்லியை துணைநிலை ஆளுநர் மூலமாக ஆட்சி புரியவும் மத்திய அரசு முயற்சிப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் மாநில தற்காலிக தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி சகுந்தலா காம்லினை ஆளுநர் நியமித்ததால் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்தது.
தலைமைச்செயலரை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என தெரிவித்த கேஜ்ரிவால், நிர்வாகத்தை கைப்பற்ற ஆளுநர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
இரு தரப்புமே அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்ற வற்றில் உள்ள அதிகாரம் பற்றி ஒரு வரையொருவர் கேள்வி எழுப்பி கடிதம் எழுதினர்.
9 அதிகாரிகள் நியமனம்
மூத்த அரசு அதிகாரிகளை நியமிப்பதில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆம் ஆத்மி அரசின் ஆலோசனைகளை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ஏற்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் அறிவுறுத்தி யது. இதைத் தொடர்ந்து குடிநீர் வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 9 அதிகாரிகளை முதல்வர் கேஜ்ரிவால் நேற்று நியமனம் செய்தார்.
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் திறமையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.