

ஏழை மக்களுக்கு ஆயுள், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 8 கோடி குடும்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டில் அரசு ஊழியர்களைத் தவிர மற்றவர்களுக்கு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் போதுமான அளவுக்கு இல்லை. 11 சதவீத குடும்பத்தினர் மட்டுமே ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.
எனவே, சில வளர்ந்த நாடுகளில் உள்ளது போல ஏழை மக்களுக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று முக்கிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி குறைவான பிரீமியத்தில் ஆயுள், விபத்துக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பெற முடியும்.
நாட்டில் மொத்தம் உள்ள 25 கோடி குடும்பங்களில், இதுவரை 7.5 கோடி முதல் 8 கோடி குடும்பங்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமரின் சுரக் ஷா பீம யோஜனா (விபத்து காப்பீடு), பிரதமரின் ஜீவன் ஜோதி பீம யோஜனா (ஆயுள் காப்பீடு) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (ஓய்வூதியம்) ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்