

பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடியை, இரண்டாவது நாளாக திங்கள்கிழமை பாஜக தலை வர்கள் பலரும் சந்தித்துப் பேசினர். இதனால் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோர் குறித்த ‘சஸ்பென்ஸ்’ தொடருகிறது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ரேஸ்கோர்ஸ் சாலையின் 7-ம் எண் வீட்டில் குடியேறும் வரை அதற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஜராத் பவனில் தங்கி வருகிறார் மோடி. இங்கு அவரை திங்கள்கிழமை சந்தித்தவர்களில் முக்கியமானவர் சுஷ்மா ஸ்வராஜ். மோடி, பிரதமர் வேட்பாளராக முன் னிறுத்தப்பட்டதை எதிர்த்த சுஷ்மா, தனக்கு அமைச்சரவையில் முக்கியப் பதவி வேண்டி அவரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இங்கு மோடியுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கும் அவரது நெருங்கிய சகாவான அமித் ஷாவையும் சுஷ்மா தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்தை அசோகா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் சுஷ்மா. இவர் வெளியுறவுத் துறையை விரும்புவதாகக் கூறப்படும் நிலையில், அருண்ஜேட்லி தனது துறையை தேர்ந்தெடுத்த பிறகே சுஷ்மாவுக்கு துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
அருண் ஜேட்லிக்கு முக்கியப் பதவி
புதிய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினராக இடம்பெறவுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதன் பிறகு இவர் ராஜ்நாத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில், காங்கிரஸ் முன் னாள் முதல்வர் அம்ரீந்தரிடம் தோல்வி யுற்றவர் ஜேட்லி. என்றாலும் கட்சி யில் அவரது முக்கியத்துவம் கருதி அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படுகிறது. ஏற்கெனவே வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த ஜேட்லிக்கு, நிதி அல்லது வெளி யுறவுத் துறை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
ராஜ்நாத்துக்கு சிக்கல்
மோடியின் அமைச்சரவை பட்டியலுக்கு, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். யோசனை அளித்து, அங்கீகரிக்க இருப்பதாகக் கருதப்படும் நிலையில், அந்த அமைப்பால் ராஜ்நாத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜ்நாத்தை பாஜகவின் தேசிய தலைவராக மேலும் சில மாதங்களுக்கு தொடரும்படி ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றும் பொறுப்பை ராஜ்நாத், ஜேட்லி, நிதின் கட்கரி, அமித்ஷா ஆகியோரிடம் மோடி அளித்திருப்பதாக பாஜக வட்டாரத்தில் நம்பப்படுகிறது. இதனால் இந்த நால்வரும் தங்களுக்குள் பலமுறை சந்தித்துப் பேசி வருகின்றனர். இவர்களில், நிதின் கட்கரியும் ராஜ்நாத்தும் அமைச்சரவை ஆலோசனையில் ஆர்.எஸ்.எஸ். மோடி இடையே பாலமாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கும் சென்று வருகின்றனர்.
புதிய எம்.பி.க்களுடன் சந்திப்பு
பாஜகவின் முக்கிய எம்.பி.க்கள் பலர் புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்புகின்றனர். இவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவேண்டும் என்று கூறி, திங்கள்கிழமை அவரை சந்தித்தனர். இதில் உ.பி.யின் கோரக்பூர் சாதுவான யோகி ஆதித்யநாத், சுல்தான்பூரில் வெற்றி பெற்ற வருண் காந்தி, மகராஷ்டிரத்தின் கோபிநாத் முண்டே மற்றும் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் மோடியை சந்தித்து பேசினர். மோடியை சந்திக்க முடியாத எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ராஜ்நாத்தை சந்தித்தனர். உ.பி.யின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங், தனது மகனுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு மோடியை சந்தித்ததாக கூறப்படுகிறது.