

டெல்லி தலைமைச் செயலாளர் நியமன விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடையே நேற்று மோதல் முற்றியது.
டெல்லி தலைமைச் செயலாளரான கே.கே.சர்மா அமெரிக்கா சென்றுள்ளதால் அவருக்கு பதில் (தலைமைச் செயலாளர் - பொறுப்பு) மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகுந்தலா காம்லினை நஜீப் ஜங் நியமனம் செய்தார். ஆனால் கேஜ்ரிவாலை ஆலோசிக்காமல் இந்த நியமனம் செய்யப்பட்டதால் அவர் அதிருப்தி அடைந்தார்.
மேலும் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கேஜ்ரிவால், பதவியேற்க வேண்டாம் என சகுந்தலா காம்லினை கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வேண்டுகோளை நிராகரித்த காம்லின் நேற்று தலைமைச் செயலாளராக (பொறுப்பு) பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஆளுநருக்கு கேஜ்ரிவால் நேற்று எழுதிய கடிதத்தில், “காம்லின் நியமனத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும். அரசியல் நிர்பந்தங்கள் இருந்தாலும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நீங்கள் நடக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.