

சிக்கலான சட்ட விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை கூறும் சட்ட ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை சட்ட ஆணை யத்தை அமைச்சரவை மறு நிர்மானம் செய்கிறது. புதிதாக சட்ட ஆணையம் அமைக்கப் பட்ட பிறகு, புதிய தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படு கிறார்கள். இந்நிலையில் சட்ட ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டம் மற்றும் பணியாளர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத் துறை செயலர் பி.கே. மல்ஹோத்ரா “கடந்த 1959-ம் ஆண்டு முதல் சட்ட ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு வந்தபோதும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மறு நிர்மானம் செய்யப்படுகிறது. எனவே, ஒரு செயல் உத்தரவின் மூலமோ அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தின் மூலமாகவோ சட்ட ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்ற ஆலோசனை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சட்ட அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்து வருகிறது. சட்ட ஆணையம், நாடாளு மன்ற சட்டத்தின் மூலம் நிரந்தர அமைப்பாக மாற்றப்படும் பட்சத்தில் அது, சட்டப்பூர்வ அமைப்பாக மாறிவிடும். செயல் உத்தரவின் மூலம் நிரந்தர அமைப்பாக மாற்றப்பட்டால், அது முந்தைய திட்டக்குழு அல்லது தற்போதைய நிதி ஆயோக் வழிமுறைகளின் கீழ் செயல்படும். இரண்டு வகைகளிலுமே மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமைக்கப்படும்.
கடந்த 21-ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சட்ட ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்காக சட்ட ஆணைய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நிரந்தர அமைப்பாக மாற்றப்படும்போது, மூன்று ஆண்டு கால குறுகிய அவகாசம் காரணமாக தரத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடம்கொடாமல் செயல்பட வாய்ப்பாக இருக்கும் என சட்ட அமைச்சகம் கருதுகிறது.
தற்போது நடைமுறையிலுள்ள 20-வது சட்ட ஆணையம் கடந்த 2012 செப்டம்பர் 1-ம் தேதி அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ல் நிறைவடைகிறது.