

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பதற்கு தடை கோரி தேமுதிக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதி மன்றம் விடுவித்ததையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் அளித்து தீர்ப்பளித்தார். இதனால், லில்லி தாமஸ் வழக்கின் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு எம்எல்ஏ பதவிக்கான தகுதியிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பால், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தகுதி யிழப்பு நீங்கி விடாது.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு அல்லது நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆகிய இரண்டில் ஒன்றை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். விடுதலையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது முதல்வராக பொறுப்பேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். அப்படி உத்தரவிட்டால் மட்டுமே ஏற்கெனவே ஏற்பட்ட தகுதியிழப்பு நீங்கும். எனவே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.