என்னால் மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது: நக்விக்கு மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

என்னால் மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது: நக்விக்கு மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்
Updated on
1 min read

'மாட்டிறைச்சி இல்லாமல் வாழமுடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்ற மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வியின் பேச்சுக்கு உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

'மாட்டிறைச்சி உண்ணாமல் வாழமுடியாதவர்கள் பாகிஸ்தான் அல்லது அரபு நாடுகளுக்கு செல்லுங்கள்' என்று மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி சமீபத்தில் பேசி இருந்தார்.

அவரது பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் பாஜக வட்டாரம் இது தொடர்பாக கருத்து கூறாமல் தவிர்த்து வந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு மாநிலத்தவரான உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் இது தொடர்பாக கருத்து கூறும்படி செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு பதிலளித்த அவர், "நான் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவன். நான் மாட்டிறைச்சி தான் உண்பேன். அதை என்னால் தவிர்க்க முடியாது. இதில் யாருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மற்றவர்களின் நடைமுறைகளில் நாம் தலையிடாமல் இருப்பதே நல்லது.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. நம் மக்களின் உணவுப் பழக்கங்களை யாரும் மாற்றி அமைக்க முடியாது" என்றார்.

பாஜக-வின் ஒரு பகுதியினரும் இந்துதுவ அமைப்புகளும் நாடு முழுவதிலும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ரிஜிஜூ பேசியுள்ளது குறித்து பாஜக வட்டாரம் மவுனம் காத்து வருகிறது.

ஏற்கெனவே மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in