Last Updated : 11 May, 2015 08:19 AM

 

Published : 11 May 2015 08:19 AM
Last Updated : 11 May 2015 08:19 AM

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு- பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் பெங்களூருவில் குவிந்துள்ளனர். இதையொட்டி துணை ராணுவ படையினர் உட்பட 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட கார், வேன், பஸ்களில் ஆயிரக்கணக் கான அதிமுக தொண்டர்கள் முன்கூட்டியே பெங்களூரு வந்துள்ளனர். சிவாஜிநகர், சாந்திநகர், காந்தி நகர், எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் நிரம்பியுள்ளன.

கடந்த முறை ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானபோதும் ஜாமீன் கோரிய போதும் அதிமு கவை சேர்ந்த முக்கிய அமைச்சர் களும் முன்னணி தலைவர்களும் எம்பிக்களும் முன்கூட்டியே பெங்களூருவுக்கு வந்து தங்கினர். இந்த முறை முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

ஜெயலலிதா அறிவுரை

இது தொடர்பாக கர்நாடக அதி முக வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த முறை தீர்ப்பு எங்கள் தலை விக்கு சாதகமாகத்தான் வரும் என்று உறுதியாக நம்புகிறோம். எனவே தீர்ப்பை உற்சாகத்துடன் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதற்காக பெங்களூருவில் தமிழர் வாழும் பகுதிகளில் சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான லட்டு, மைசூர்பாக் உள்ளிட்ட இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதே போல ஓசூரில் இருந்து திறந்த வேன் மூலம் ஞாயிற்றுக் கிழமை இரவு பட்டாசுகள் பெங்க ளூரு கொண்டு வரப்பட இருக்கி றது. தீர்ப்பு வெளியான அடுத்த கணம் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட தயாராக இருக்கிறோம்.இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இருந்து வந்துள்ள அதிமுக தொண்டர்களும் இனிப்புகளும் பட்டாசுகளும் வாங்கி வந்துள்ளனர்.

அமைச்சர்கள், முக்கிய தலை வர்கள், எம்பிக்கள் யாரும் பெங்களூரு செல்ல வேண்டாம் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்'' என்றனர்.

இதனிடையே உளவுத்துறை அதிகாரிகள்,'' பெங்களூருவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான அதிமுகவினர் திரண்டிருப்பதால் தீர்ப்பு வெளியாகும்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும் சிறிய அளவிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன''என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அலோக் குமார் நேற்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தியை வர வழைத்து ஆலோசனை நட‌த்தினார்.

தீர்ப்பு வெளியாகும்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது, நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது, கூட்டம் போடவோ, பேரணியாக செல்லவோ கூடாது என அப்போது அவர் அறிவுறுத்தினார்.

அதற்கு புகழேந்தி, “அதிமுக தொண்டர்கள் சட்டம் ஒழுங்குக்கு இடையூறு செய்ய மாட்டார்கள்'' என உறுதியளித்துள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்புப் பணிகள் குறித்து அலோக் குமார் கூறியதாவது: ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியாகும்போது எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என அவ்வப்போது உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கையை 500-ல் இருந்து 1500 ஆக உயர்த்தியுள்ளோம். 20 குழுக்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக் கள் உட்பட அதிமுக நிர்வாகிகள் யாரும் நீதிமன்றத்துக்குள் நுழைய அனுமதி இல்லை. இதேபோல கர்நாடக - தமிழக எல்லையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்'' என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x