

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் நடத்தும் போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
அரசுக்கும் போராட்டக்காரர் களுக்கும் இடையே நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை ஜெய்ப்பூரில் நடத்த அரசு முடிவு செய்தது. ஆனால், ஜெய்ப்பூர் செல்ல குஜ்ஜார் இனத் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா மறுத்து விட்டார்.
போராட்டம் உச்சகட்ட மாக நடைபெற்று வரும் பயானா டவுனில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை நடந்தது. சுகாதார அமைச்சர் ராஜேந்திர ரத்தோர், சமூக நீதித்துறை அமைச்சர் அருண் சதுர்வேதி, உணவுத் துறை அமைச்சர் ஹேம் சிங் பதானா, குஜ்ஜார் தலைவர் பைன்ஸ்லா ஆகியோருக்கு இடையே நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படவில்லை.
போராட்டம் தொடர்வதால், பரத்பூர் வழியாகச் செல்லும் டெல்லி-மும்பை ரயில்பாதை, தவுசா வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 11, சவய்மதோபுர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும் பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படுகின்றன.
ஜெய்ப்பூரில் பேச்சு வார்த்தையை நடத்தும் வகையில் குஜ்ஜார் இனத் தலைவர்களை சம்மதிக்க வைப்போம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைன்ஸ்லா, ஹிம்மத் சிங் உள்ளிட்ட பல குஜ்ஜார் தலைவர்கள் மீது கலவரத்தைத் தூண்டுதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.