சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ.வுக்கு எதிராக களமிறங்கும் திமுக வழக்கறிஞர்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ.வுக்கு எதிராக களமிறங்கும் திமுக வழக்கறிஞர்கள்
Updated on
2 min read

கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா சந்தித்த அத்தனை தேர்தல்களின்போதும் சொத்துக்குவிப்பு வழக்கு அவர் முன்னால் சீனப் பெருஞ்சுவராக வந்து நின்றது. தற்போது அவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தாலும் செய்யாவிட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய திமுக வழக்கறிஞர்கள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

டி.ஆர். அந்தியர்ஜூனா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக திறமையாக வாதம்புரிபவர் டி.ஆர்.அந்தியர்ஜூனா. சமீபத்தில் மறைந்த அருணா ஷான்பாக் பலாத்கார வழக்கு, காவிரி, கிருஷ்ணா உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதிட்டுள்ளார்.

பம்பாய் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற அந்தியர்ஜூனா தனது வாதத் திறமையால் மிக இளம் வயதில் மகாராஷ்டிர அரசின் தலைமை வழக்கறிஞர் ஆனார். 1996-ல் நாட்டின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இவர், பார் கவுன்சில் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2003-ல், 'ஜெயலலிதா வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்' என்பதில் தொடங்கி 2013-ல், 'பவானிசிங்கை நீக்க வேண்டும்', 2015-ல், 'மீண்டும் பவானிசிங்கை நீக்க வேண்டும்' என அன்பழகன் போட்ட அத்தனை வழக்கிலும் அந்தியர்ஜூனா ஆஜரானார்.

ஜெயலலிதா தரப்பில் ஃபாலி எஸ். நரிமன், கே.டி. துளசி உள்ளிட்ட‌ பெரிய வழக்கறிஞர்கள் ஆஜராகி மணிக்கணக்கில் வாதிட்டாலும், அந்தியர்ஜூனா மிக சுருக்கமாகவே வாதிடுவார்.

கர்ஜனை விகாஷ் சிங்

ஜெயலலிதா வழக்கில் பவானிசிங் நுழைந்ததில் இருந்து திமுக தரப்பில் ஒரு மனு எப்போதும் தயாராக இருக்கும். அதாவது, 'சென்னையில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்ற காரணமாக இருந்தவர் திமுக பொதுச்செயலாளர் க.அன்ப‌ழகன். இவ்வழக்கை தொடர்ந்து கண்காணித்துவரும் அவரை மூன்றாம் தரப்பாகவும் அரசு வழக்கறிஞருக்கு உதவவும் அனுமதிக்க வேண்டும்' என அதில் எழுதப்பட்டிருக்கும்.

இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் திமுக தரப்பில் விகாஷ் சிங் ஆஜரானார். ‘அன்பழகனுக்கு எழுத்துப்பூர்வமாக வாதிட அனுமதி அளிக்க வேண்டும்' என மூன்று மணி நேரம் இடைவிடாமல் அவர் வாதிட்டார். அவரின் கர்ஜனையை கேட்ட பிறகே நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு 90 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வ வாதத்தை அளிக்க அனுமதி அளித்தார்.

சி.வி.நாகேஷ்

கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் 'ஸ்காட்லாந்து போலீஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் சி.வி.நாகேஷ், திமுக தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர்.

'பவானிசிங்கை நீக்கக் கோரியும், திமுகவை மூன்றாம் தர‌ப்பாக சேர்க்கக் கோரியும்' நீதிபதி குமாரசாமி, தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, நீதிபதி குமார் அடங்கிய அமர்வு முன்னிலையில் மூன்று முறை மணிக்கணக்கில் அவர் வாதிட்டார். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் நாகேஷின் வாதத்தை ஏற்கவில்லை.

இதையடுத்து திமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா களமிறங்கினார். அப்போது முக்கிய குறிப்புகளை சி.வி.நாகேஷ் தொலைபேசி மூலம் அவருக்கு தெரிவித்தார். ஜெயந்திர சரஸ்வதியின் வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட விதத்தை குறிப்பிட்ட நாகேஷின் கருத்தை அந்தியர்ஜூனா நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் எதிரொலித் தார். இதையடுத்து அரசு வழக்கறி ஞர் பொறுப்பில் இருந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பவானி சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

எனவே மேல்முறையீட்டு வழக் கிலும் சி.வி.நாகேஷின் ஆலோ சனையை பெற திமுக வழக் கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திமுக வழக்கறிஞர்கள் குழு

1.சண்முக சுந்தரம் மற்றும் குழுவினர் (உச்ச நீதிமன்றம்)

2.வி.ஜி.பிரகாசம் மற்றும் குழுவினர் (உச்ச நீதிமன்றம்)

3.சோமசேகர் மற்றும் குழுவினர்.

4. செல்வகணபதி, தாமரை செல்வன், ராமசாமி ( பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 2013-ல் சில மாதங்கள்) 5.குமரேசன், சரவணன், தாமரை செல்வன், நடேசன், பாலாஜிசிங், ராமசாமி (2014 முதல் தற்போது வரை)

6.சி.வி.நாகேஷ் மற்றும் குழுவினர் (கர்நாடக உயர் நீதிமன்றம்)

7. டி.ஆர்.அந்திய‌ர்ஜூனா, விகாஷ் சிங் மற்றும் குழுவினர் (உச்ச நீதிமன்றம்)

(இன்னும் வருவார்கள்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in