

கடந்த ஆட்சியின் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவுகளை, தகவல் பெட்டகமாக மாற்றியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு அரசுக்குச் சொந்தமானது. அதனை முன்னாள் பிரதமர் ட்விட்டர் பதிவுகளின் பெட்டகமாக்கி, இந்த பிரதான கணக்காக இணைத்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 'இதனை இவ்வளவு அவசரம் அவசரமாக மாற்றியது ஆச்சரியமாக இருக்கிறது. ட்விட்டர் கணக்கு அரசாங்கச் சொத்து' என்றார்.
இவ்வாறு ட்விட்டர் கணக்கு மாற்றப்பட்டதினால் ஏற்கெனவே அதைப் பின்தொடர்ந்த 1.24 மில்லியன் வாசகர்கள் இழக்கப்படுகின்றனர். புதிய பிரதமர் இந்த ட்விட்டர் கணக்கில் பூஜ்ஜிய வாசகர்களுடன் துவங்கவேண்டும்.
ஆனால், மன்மோகன் சிங்கின் செய்தித் தொடர்பு ஆலோசகர் பங்கஜ் பச்சௌரி கூறுவது என்னவெனில், "தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து செய்தி பரிவர்த்தனைகளும் பெட்டகமாக்கப்பட வேண்டும். அதைத்தான் செய்துள்ளோம்" என்றார்.
யார் இந்த மாற்றத்தைச் செய்தது என்று கேட்டதற்கு பச்சௌரி, பிரதமர் அலுவலகம்தான் இந்த மாற்றத்தைச் செய்தது என்றார்.
புதிய பிரதமருக்கும் அவரது அலுவலகத்திற்கும் அந்த பழைய ட்விட்டர் கணக்கே இருக்கவேண்டும். இப்படிச் செய்வது இழிவானது, அறமற்றது, சட்டவிரோதமானது என்று மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவககத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு >https://twitter.com/PMOIndia | பெட்டமாக்கப்பட்ட பின் அதன் முகவரி >https://twitter.com/PMOIndiaArchive