

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இ்ந்தக் கொண்டாட்டத்தை அம்பேத்கர் பிறந்த மத்தியப் பிரதேச மாநிலம் மௌ நகரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 2-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் நேற்று ஆலோசனை நடத்தப் பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு ஒருபோதும் மரியாதை செலுத்தியதில்லை. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. அவரது புகைப் படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கவில்லை. இப்போது அம்பேத்கரின் பிறந்த நாளை அவர் பிறந்த ஊரில் தொடங்கி வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக பதவியில் இருந்த அக்கட்சி ஏன் அவருக்கு மரியாதை செலுத்த வில்லை? இப்போது மக்களின் செல்வாக்கை இழந்து நிற்பதால் அவர்களுக்கு அம்பேத்கர் நினைவு வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலித் இனத்தவர்களின் வாக்கு களை கவர வேண்டும் என்ற நோக் கத்தில் காங்கிரஸும் பாஜகவும் அம்பேத்கரின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள தலித் வாக்குகளைக் கவர பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி., பிஹாரில் பெரும்பான்மையான தலித் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.