

‘‘விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, வரும் 14-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம் யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து, நாடு தழுவிய போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் முடிவெடுத்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தனிப்பட்ட நடவடிக்கை இது. வரும் 14-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற சாலையில் சிபிஐ மூத்த தலைவர்கள் கண்டன பேரணி நடத்துவார்கள். அதே நாளில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும்.
இந்த போராட்டத்துக்கு கேரளம், தெலங்கானா, தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அமோக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தில், இப்போதைய பாஜக அரசு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக நிலம் கையகப் படுத்தும் போது விவசாயிகளின் கருத்தை கேட்பது கட்டாயம் என்ற பிரிவை நீக்க பாஜக அரசு திட்ட மிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரானது. அதேபோல் கையகப் படுத்தும் நிலத்தை 5 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால், அதை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த பிரிவையும் பாஜக அரசு நீக்க நினைக்கிறது.
பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் நாட்டின் விளை நிலங்கள் கணிசமாகக் குறைக்கப் பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த விளை நிலங்களை கையகப்படுத்துவதை விட, பொது நிலங்களை கையகப் படுத்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். மேலும், பயன் படுத்தப்படாமல் உள்ள புறம் போக்காக உள்ள நிலங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவது குறித்தும் அரசு யோசிக்கலாம்.
தொழிற்சாலைகளுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால், விவசாயி களை பாதிக்கும் திட்டங்களைத் தான் எதிர்க்கிறோம். இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.