

பல வருடங்கள் கழித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கும் பா.ஜ.க.வின் அமைச்சரவை எப்படி இருக்கும் என்பது பற்றிய ஊகங்கள் தினந்தோறும் வட இந்திய ஊடகங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கை ஓங்கியிருக்கும் என்று ஒரு சாராரும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு இருக்காது என்று மறுசாராரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்றும் சொல்லப் படுகிறது. ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கம் இருந்தால் பா,ஜ.க.வினர் தவிர இதர கட்சியினர் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு. ஆனால் தற்போதைக்கு கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்றி பல துறை சார்ந்த நிபுணர்களையும் அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இடம் பெற வைக்கும் திட்டம் நரேந்திர மோடிக்கு இருப்பதாக சொல்கிறார் கள் பா.ஜ.க.வின் தலைவர்கள்.
தற்போது பா.ஜ.க. தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, சுரேஷ் பிரபு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது. தேர்தலில் தோற்றிருந்தாலும் அருண் ஜேட்லிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். மோடிக்கு மிக நெருக்கமான அமித் ஷாவிற்கு அமைச்சராகவோ அல்லது ஒருவேளை ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றால் பா.ஜ.க.வின் அடுத்த தலைவராகவோ அமரும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் தனது வாழ்க்கையை தொடங்கிய அமித் ஷா நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரச் சாரத்தை வடிவமைத்தவர்களுள் முக்கியமானவர். ஆனால் குஜராத் கலவரம், போலி என்கவுன்ட் டர்கள் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்படும் அமித் ஷா அமைச் சரவையில் இடம் பெறுவது எந்த அளவுக்கு சரியான அறிகுறி யாக இருக்கும் என்பது விவாதத் திற்குரியதே.
அதேநேரம் வளர்ச்சி கோஷத்தை முன்வைத்து ஜெயித் திருக்கும் மோடி அதற்கேற் றாற்போல துறை சார் நிபுணர்கள் சிலரையும் அமைச்சரவையில் இடம் பெற வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் தரனுக்கு அமைச்சரவையில் ரயில்வே துறை இணை அமைச்சராகும் வாய்ப்பு தரப்படலாம் என்று பா.ஜ.க.வில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற ஐ.இ.எஸ். அதிகாரியான தரன் தில்லி மெட்ரோவை வடிவமைத்த பெருமைக்குரியவர். 1964-ல் வீசிய புயலில் தனுஷ்கோடி நகரமே அழிந்து போனபோது பாதிக்கப்பட்ட பாம்பன் பாலத்தை சீரமைக்க ஆறு மாதங்கள் கெடு விதித்தது ரயில்வே துறை. ஆனால் தரன் தலைமையிலான குழு வெறும் 45 நாட்களிலேயே பாம்பன் பாலத்தை மறு சீரமைத்தது. இந்தியாவின் முதல் மெட்ரோவான கொல்கத்தா மெட்ரோவை வடிவமைத்தவரும் இவரே. ஓய்வு பெற்ற பிறகும் கொங்கன் ரயில்வே துறையை கட்டமைக்க இவரது பணிகளை பயன்படுத்திக்கொண்டது மத்திய அரசு. பிறகு தில்லி மெட்ரோவின் தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார். இப்போதும் கொச்சி மெட்ரோ, லக்னோ மெட்ரோ ஆகியவற்றின் ஆலோசகராக செயல்படும் தரன் பத்ம விபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.
ரயில்வே துறையில் அமைச் சராக நியமிக்கப்படுவது பற்றிய ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளுக்கு கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை தரன். ஆனால் ஓர் அலங்காரப் பதவியில் அமர தனக்கு விருப்பமில்லை என்று அவர் ‘தி இந்து’விடம் சொன்னார். “இந்த நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ அதை ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன். உறுதியான செயல்பாடுகள், மாற்றங்களை உருவாக்கும் அதிகாரம் இருந்தாலொழிய அமைச்சர் பதவியில் அமர எனக்கு விருப்பமில்லை” என்கிறார் அவர்.
மோடி என்ன முடிவெடுப்பார்?