

பிரதமர் அலுவலகத்தை விட்டு விலக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலருக்கு பிரதமர் மன்மோகன் சிங் பிரியாவிடை கடிதம் எழுதியுள்ளார். சுமார் பத்து ஆண்டு காலம் பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் கூடிய விரைவில் பிரதமர் அலுவலகத்தை விட்டு விலக இருக்கிறார்.
இந்நிலையில், இத்தனை ஆண்டுகாலம் தன்னுடன் இணைந்து செயல்பட்ட உலகத் தலைவர்களை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீனாவின் முன்னாள் பிரதமர் வென் ஜியாபாவோ, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்டோருக்கு தன் பிரியாவிடை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார் மன்மோகன் சிங்.
இதில் வென் ஜியாபாவோ மன் மோகன் சிங்கின் கடிதத்திற்குப் பதில் அனுப்பியுள்ளார். தன் கைப்பட எழுதிய அந்த பதில் கடிதத்தில், மன்மோகன் சிங்கின் தலைமைப் பண்புகளைக் கண்டு தான் பலமுறை வியந்து போனதாக வென் ஜியாபாவோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெய்ஜிங்கிற்கு வருகை தந்த மன்மோகன் சிங் கிற்கு, பதவியில் இல்லாத போதும் அவருக்காகச் சிறப்பு மதிய உணவு விருந்தை வென் ஜியாபோ ஏற்பாடு செய்திருந்தார். தங்கள் இருவருக்கிடையே யான உறவைப் பற்றி வென் கூறும் போது, ‘தத்தமது தேசங்களைச் சரியான திசையில் பயணிக்க வைத்த இரண்டு ஓட்டு நர்கள்' என்று குறிப்பிடுகிறார்.
2009-ம் ஆண்டில் ஒபாமா பதவியேற்ற பிறகு மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் பலமுறை சந்தித்துள்ளனர். அதேபோல, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் பலமுறை சந்தித்துள்ளார்.