Published : 30 May 2015 03:04 PM
Last Updated : 30 May 2015 03:04 PM

ஹரியாணா பல்லப்கர் பகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதன் பின்னணி என்ன?

திங்களன்று நடத்தப்பட்ட தாக்குதல்களினால் ஹரியாணா மாநில பல்லப்கார் பகுதியில் உள்ள அடாலி கிராம முஸ்லிம்கள் பதற்றமடைந்துள்ளனர்.

4 நாட்களுக்கு முன்பாக அடாலி கிராமத்தில் இந்துக்கள் நடத்திய தாக்குதலில் அக்கிராம முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 400 பேர் பல்லப்கர் காவல் நிலைய வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடும் வெயிலிலும், போதிய உணவு மற்றும் குடிநீரில்லாத நிலையிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தயங்கி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய இந்துக்களை கைது செய்யக் கோரியும், எரிந்து சாம்பலான வீடுகளுக்கு இழப்பீடு கோரியும் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மே 25-ம் தேதி கும்பல் ஒன்று இப்பகுதியில் முஸ்லிம்கள் மீது செங்கற்கள், வாள், பெட்ரோல் குண்டுகள் கொண்டு தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 20 வீடுகள் தீக்கிரையாயின.

ஏன் இந்தத் திடீர் தாக்குதல் என்று உள்ளூர்வாசிகளிடம் கேட்ட போது, 30 ஆண்டுகால பழைமை மசூதி சர்ச்சை என்று கூறுகின்றனர். 2009-ம் ஆண்டு இந்துக்கள் இந்தப் பகுதியை கிராம பஞ்சாயத்துக்கு உரியது என்று கோரினர், ஆனால் முஸ்லிம்களோ இந்த நிலப்பகுதி வக்ஃப் வாரியத்தைச் சேர்ந்தது என்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பரிதாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், இந்துகக்ள் தொடர்ந்து இதனை எதிர்த்து வந்துள்ளனர். கோயிலுக்கு அருகில் இந்த மசூதி இருக்கிறது என்பதே இந்துக்களின் வாதம்.

இந்நிலையில் மசூதி மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் அதிகரித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அந்த காவலதிகாரி தெரிவித்த போது, “பஞ்சாயத்து தேர்தல் வரவிருக்கின்றன. இந்துக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகளில் சிதறியதால் தற்போதைய தலைவர் கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதனால் முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. இந்தத் தலைவர் முஸ்லிம்களின் வாக்குகளைச் சேகரிக்க்கும் போது மசூதியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்” என்றார்.

இதனால் ராஜேஷ் சவுத்ரி முஸ்லிம்கள் ஆதரவுடன் பஞ்சாயத்து தலைவரானார். கோர்ட் தீர்ப்பையும் அடுத்து கிராமத்தினர் மசூதியை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் சவுத்ரி வலியுறுத்தினார்.

இதனையடுத்து பதற்றம் அதிகரித்ததோடு, இந்துக்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் தொடுப்பதாகவும் கோயில் அருகே இந்துப் பெண்களை முஸ்லிம்கள் கேலி செய்ததாகவும் கடும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

ஆனால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் ஆச்சரியமளிப்பதாகவே முஸ்லிம்கள் பலர் தெரிவித்தனர்.

இது குறித்து இந்துக்களின் தாக்குதலில் முகத்தில் காயமேற்பட்ட 40 வயது ஷாகிர் அலி என்பவர் கூறும் போது, இந்தத் தாக்குதலை பல வாரங்கள் திட்டமிட்டிருப்பார்கள் போன்றே தெரிகிறது. அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள், ஒரு டிராக்டர் முழுக்க கற்கள், வாளிவாளியாக மண்ணெண்ணெய் ஆகியவற்றை கொண்டு வந்தனர், மேலும் கார்களில் பிற கிராமத்திலிருந்து இந்துக்களை திரட்டி வந்தனர்” என்றார்.

இப்போதைக்கு நிலைமை சுமுகமாக இருந்தாலும் முஸ்லிம்கள் மசூதியை மறுசீரமைப்பு செய்வதில் இந்துக்களுக்கு விருப்பமில்லாத நிலையே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x