

பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என 'தி இந்து' (ஆங்கிலம்) பத்திரிகைக்கு பிரத்யேக பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய கட்சியாகும்.
"பொறுப்பான பதவியை ஏற்றுக்கொள்ளும் போது அதற்கு தகுந்தவாறு எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். வெறும், 30 தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுகிறோம். இத்தகைய சிறிய அளவிலான எண்ணிக்கைகளை வைத்துக் கொண்டு தேசத்தை ஆள நினைப்பது நியாயமற்றது" என சரத் பவார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இருப்பினும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் ஒருமித்த கருத்துகள் உடைய மாநிலக் கட்சிகளுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டு மத்தியில் நிலையான அரசை உருவாக்கும் வகையில் அரசியல் சமரசம் செய்யும் பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் இடையே ஒரு அரசியல் சமரசவாதியாக தன்னால் நிச்சயமாக இயங்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தனக்கு தெரியவில்லை என கூறியுள்ள அவர், இத்தகைய நிலையில் இவ்விரு கட்சிகளும் மாநிலக் கட்சிகளின் ஆதரவை கோர வேண்டியிருக்கும். எனவே மாநிலக் கட்சிகளின் பங்கு தேர்தலுக்குப் பின்னர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
"சில மாநிலக் கட்சிகள் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முன்வரமாட்டார்கள். சில மாநிலக் கட்சிகள் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாவிட்டாலும், இது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்க தயாராக இருக்கலாம். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் கூட தேசியவாத காங்கிரஸ் கட்சி அந்த கூட்டணியில் தொடரும்" இவ்வாறு பவார் கூறினார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ரகசியமாக சந்தித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைப்பது குறித்து ஆலோசித்ததாக எழுந்த புகாரை பவார் திட்டவட்டமாக மறுத்தார்.
குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு தொடர்பாக அவரது நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், "ஏற்கெனவே நீதிமன்றம் ஒரு நிலையை எடுத்துள்ளது, எனவே அது குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்புவது சரியல்ல. ஆனால் எந்த ஒரு தலைவரும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தால் அது நியாயமாகது" என்றார்.